சம்பயி சோரன் பாஜகவில் இணைந்த அடுத்த நாளிலேயே மற்றொரு ஜே.எம்.எம். சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜகவில் இணைந்தார்.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான லோபின் ஹேம்ப்ரோம், இன்று ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து பாஜகவில் இணைந்தார்.
கட்சியிலிருந்து விலகியதற்காக ஹேம்ப்ரோம் கூறியதாவது, ``முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஷிபு சோரன் காலத்திற்கு பிறகு, கட்சி மாறிவிட்டது. இப்போதெல்லாம், கட்சியின் மூத்த தலைவர்களுக்கு மரியாதை அளிக்கப்படுவது கிடையாது.
அதனால்தான், ஜார்கண்டின் வளர்ச்சிக்காகவும், பழங்குடியினரின் மேம்பாட்டிற்காகவும் நான் பாஜகவில் சேர முடிவு செய்தேன்’’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா முன்னிலையில், ஹேம்ப்ரோமுக்கு பாஜக உறுப்பினர் பதவியை கட்சியின் மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ், ஜார்கண்ட் சட்டப்பேரவையில் இருந்து ஹேம்ப்ரோம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
கட்சியின் கசப்பான அவமானம் குறித்து அதிருப்தி தெரிவித்த சம்பயி சோரனும், வெள்ளிக்கிழமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.