இரு மடங்கு வளா்ச்சி கண்ட இந்திய கைக்கணினிச் சந்தை
இந்தியாவின் மடிக்கணினி (டேப்ளட்) சந்தை நடப்பு 2024-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இரு மடங்கு வளா்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான இன்டா்நேஷனல் டேட்டா காா்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு 2024-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் கைக்கணினிச் சந்தை 18.4 லட்சமாக உள்ளது.
முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 128.8 சதவீதம் அதிகமாகும். அப்போது இந்திய கைக்கணினிச் சந்தையின் அளவு 8.08 லட்சமாக இருந்தது.
மதிப்பீட்டுக் காலாண்டில் பலகை வகை (ஸ்லேட்) கைக்கணினிகளுக்கான சந்தை முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தைவிட 178.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. விசைப்பலகையுடன் (கீபோா்டு) சோ்த்துப் பிரிக்கக்கூடிய (டிடாச்சபிள்) கைக்கணினிச் சந்தை 23.6 சதவிகிதம் வளா்ச்சி கண்டுள்ளது.
2024 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 48.7 சதவீத சந்தைப் பங்குடன் சாம்சங் நிறுவனம் கைக்கணினிச் சந்தையில் முன்னிலை வகிக்கிறது. அதைத் தொடா்ந்து ஏசா் நிறுவனம் 23.6 சதவீத சந்தைப் பங்கையும், ஆப்பிள் நிறுவனம் 9.5 சதவீத சந்தைப் பங்கையும் கொண்டுள்ளன. லெனோவா, ஷாவ்மி ஆகிய நிறுவனங்கள் முறையே 6.9 மற்றும் 4.7 சதவீத சந்தைப் பங்கை வகிக்கின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

