தில்லி தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி தர்மேந்திரா இன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏஜிஎம்யூடி கேடரில் 1989 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான தர்மேந்திரா, தில்லிக்கு மாற்றப்படுவதற்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
ஏஜிஎம்யூடி கேடர் எனப்படும் அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கேடரின் மூத்த அதிகாரிகளில் ஒருவரான இவர், வருகிற பிப்ரவரியில் தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதைத் தொடர்ந்து மாற்றப்பட்டுள்ளார்.
நாளை (செப். 1) முதல் இவர் தில்லியில் பணியமர்த்தப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது.
தற்போது பதவியில் இருக்கும் 1987 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி நரேஷ் குமாரின் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து தர்மேந்திரா புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லி அரசில் தனது முந்தைய பணிக்காலத்தில் சிவில் பொறியாளராகப் பயிற்சி பெற்ற தர்மேந்திரா வருவாய்த்துறை, பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, தொழில் துறை போன்றவற்றில் செயலாளராகப் பல்வேறு பதவிகளை வகித்தார்.
தர்மேந்திரா ஏப்ரல் 2022-ல் அருணாசலப் பிரதேசத்திற்கு மாற்றப்படும் முன், புது தில்லி நகராட்சி கவுன்சிலின் தலைவராக இருந்தார்.
மேலும், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகங்களில் பணியாற்றியதுடன் தாத்ரா மற்றும் நகர் ஹவெலி, தாமன் மற்றும் தையூ பகுதிகளின் வளர்ச்சித்துறை ஆணையராகவும், அய்சோல் (மிசோரம்) பகுதியின் குடியிருப்பு ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.