காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் மாட்டிறைச்சிக்குத் தடை: அசாம் முதல்வர்!

காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் கொடுத்தால் அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் மாட்டிறைச்சியைத் தடை செய்வேன் எனக் கூறிய அசாம் முதல்வர்.
அசாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா.
அசாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா.
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் மாட்டிறைச்சி தடை செய்யப்படும் என அசாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

அசாமில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி 5 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதில், கடந்த 5 தேர்தல்களில் காங்கிரஸ் ஜெயித்துவந்த சமாகுரி தொகுதியும் அடக்கம்.

சமாகுரி தொகுதியில் கடந்த 5 முறை எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் ரகிபுல் ஹுசைன் இந்த முறை துப்ரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 10.12 லட்சம் வாக்குகளுடன் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்பி ரகிபுல் ஹுசைனின் மகனும், காங்கிரஸ் வேட்பாளருமான தன்சிலை பாஜகவின் திப்லு ரஞ்சன் சர்மா தோற்கடித்தார்.

இந்த நிலையில், அங்குள்ள முஸ்லிம்களுக்கு பாஜகவினர் மாட்டிறைச்சி வழங்கி ஜெயித்ததாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று பத்திரிகையாளர்களுடன் பேசிய அசாம் முதல்வர் ஹிமாந்த விஸ்வ சர்மா கூறுகையில், ”சமாகுரி தொகுதி 25 ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் உள்ளது. சமாகுரி போன்ற ஒரு தொகுதியை காங்கிரஸ் 24,501 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்பது வரலாற்றில் அவமானகரமானது. இது பாஜவின் வெற்றி என்பதை விட காங்கிரஸின் தோல்வி என்றே சொல்லவேண்டும்.

ஆனால், இந்த சோகத்திலும் ரகிபுல் ஹுசைன் மாட்டிறைச்சி உண்ணுவது தவறு என்ற ஒரு நல்ல விஷயத்தை சொன்னார், இல்லையா? வாக்காளர்களுக்கு மாட்டிறைச்சி வழங்கி காங்கிரஸ் - பாஜக வெற்றி பெறுவது தவறு என்று அவர் கூறினார்” என சர்மா தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியினர் சமாகுரி தொகுதியில் தனது வாக்காளர்களுக்கு இதுவரை மாட்டிறைச்சி வழங்கி வெற்றி பெற்றனரா என்று தெரியவேண்டும்.

ரகிபுல் ஹுசைன் அவர் கைப்பட கடிதம் ஒன்று எழுதி கோரிக்கை வைத்தால் அசாமில் மாட்டிறைச்சி தடை செய்யப்படும் என்று கூறிக்கொள்கிறேன். அப்படி தடை செய்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.

காங்கிரஸ் தலைவர் பூபென் போராவும் இதே கருத்தை முன்மொழிந்தால் நான் அவருக்கு கடிதம் எழுதி இதுகுறித்து கேட்டறிவேன். அடுத்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் மாட்டிறைச்சியைத் தடை செய்வேன். அப்போது பாஜக உள்பட எந்தக் கட்சியினரும் தேர்தல் நேரத்தில் மாட்டிறைச்சி வழங்கமுடியாது. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் என அனைவரும் மாட்டிறைச்சி உண்ணுவதை நிறுத்திவிடுவார்கள். எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்” என்று அவர் கூறினார்.

அசாமில் மாட்டிறைச்சி தடை செய்யப்படவில்லை. ஆனால், அசாம் பசுப் பாதுகாப்புச் சட்டம் 2021-ன் படி ஹிந்துக்கள், ஜெயின்கள், சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் 5 கி.மீ சுற்றளவில் பசு வதை மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com