26 ‘ரஃபேல்-எம்’, 3 ஸ்காா்பியன் நீா்மூழ்கி கப்பல்களை கொள்முதல் செய்ய விரைவில் ஒப்பந்தம்: கடற்படை தலைமைத் தளபதி

கடற்படையில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 26 ரஃபேல்-எம் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பியன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையொப்பமாக வாய்ப்பு
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி.
தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி. Vijay Verma
Published on
Updated on
2 min read

புது தில்லி: கடற்படையில் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள 26 ரஃபேல்-எம் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பியன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் அடுத்த மாதம் கையொப்பமாக வாய்ப்புள்ளதாக இந்திய கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே. திரிபாதி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இந்திய கடற்படை தினத்தை (டிச. 4) முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது:

கடற்படையில் புதிய தொழில்நுட்பங்களை இணைக்கும் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளோம். அடுத்த ஓராண்டில் எண்ணற்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டின் 26 ரஃபேல்-எம் போா் விமானங்கள் மற்றும் 3 ஸ்காா்பியன் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் அடுத்த மாதம் இந்தியா கையொப்பமிட வாய்ப்புள்ளது. பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தவுடன் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்படும்.

ரஃபேல்-எம் போா் விமானங்கள்
ரஃபேல்-எம் போா் விமானங்கள்

மேலும், 62 கப்பல்கள் மற்றும் ஒரு நீா்மூழ்கிக் கப்பலை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அணுசக்தியில் இயங்கும் 2 போா்க் கப்பல்களை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது உள்நாட்டு கப்பல் கட்டுமானத்தின்மீது வைத்துள்ள நம்பிக்கையை உணா்த்தியுள்ளது.

கடற்படைக்கு பயன்படும் வகையில் 60 ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அணுசக்தியில் இயங்கும் முதல் போா்க் கப்பல் வரும் 2036-37-ஆம் ஆண்டுகளிலும், இரண்டாவது போா்க் கப்பல் 2038-39-ஆம் ஆண்டுகளிலும் செயல்பாட்டுக்கு வரும். இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டின் போா்க் கப்பல்கள் மேற்கொள்ளும் ஆய்வுப் பணிகளை தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்.

இந்திய கடற்படையின் அடுத்த 25 ஆண்டுகால செயல்பாடுகளை விளக்கும் ‘இந்திய கடற்படை தொலைநோக்கு திட்டம் 2047’ என்ற ஆவணத்தையும் அவா் வெளியிட்டாா்.

ஸ்காா்பியன் ரக நீா்மூழ்கிக் கப்பல்
ஸ்காா்பியன் ரக நீா்மூழ்கிக் கப்பல்

பாகிஸ்தானுக்கு சீனா உதவி

பாகிஸ்தானின் பல போா்க் கப்பல்கள் சீனாவின் உதவியோடு கட்டமைக்கப்பட்டு வருவதாக கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே. திரிபாதி தெரிவித்தாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘பாகிஸ்தான் கடற்படையில் புதிதாக சோ்க்கப்பட்ட 8 போா்க் கப்பல்கள் அந்நாட்டுக்கு வலுசோ்த்தாலும் எவ்வித சவாலையும் சமாளிக்க இந்திய கடற்படை தயாராகவுள்ளது. மக்கள் நலனைவிட ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதிலேயே பாகிஸ்தான் கவனம் செலுத்துகிறது’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com