மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி: மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.
 திருச்சி சிவா
திருச்சி சிவா
Published on
Updated on
1 min read

புது தில்லி: கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை மேலும் பேசியதாவது:

வரலாற்று ரீதியாக மாநில பட்டியலில் இருந்த "கல்வி', 1976 ஆம் ஆண்டு அவசரநிலையின்போது ஒத்திசைவுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அந்த முடிவு அசாதாரணமான சூழ்நிலையில் எடுக்கப்பட்டு பின்னர் தேவையற்றதாகிவிட்டது.

26 கோடி மாணவர்கள் கொண்ட இந்தியாவின் பரந்த கல்விச்சூழல் பன்முகத்தன்மை என்பது, பிகாருக்கும் கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் இடையே நிலவும் மிகப்பெரிய கல்வியறிவு விகித இடைவெளியையும், மாநில அளவிலான கல்விக் கொள்கை வகுத்தலின் அவசியத்தையும் நிரூபிக்கிறது.

மத்திய அரசால் உருவாக்கப்படும் கல்விக் கொள்கைகள் பிராந்திய நுணுக்கங்களைக் கவனிக்காது. அது திறமையின்மைக்கே வழிவகுக்கும். உதாரணமாக, பழங்குடியினருக்கான ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணவர்கள், மத்திய கல்விக்கொள்கையால் சவால்களை எதிர்கொள்கின்றனர். மத்திய அரசால் பணியமர்த்தப்படும் ஆசிரியர்கள், அவர்கள் பணியாற்றும் மாநில மொழிகளுடன் ஈடுகொடுக்க முடியாமல் போராடுகின்றனர். அது மாணவர்களுக்கும் கற்பித்தலுக்கும் இடையிலான தொடர்பை துண்டிக்கச் செய்கிறது.

மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் மாநில முன்னுரிமைகளை எவ்வாறு குறைமதிப்பிடும் என்பதற்கு நீட் ஓர் எடுத்துக்காட்டு. நீட் தேர்வு முறை கிராமப்புறங்களில் இருந்தும் மாநில கல்வித்திட்டம் மூலமும் பயின்று வந்த மாணவர்களின் மருத்துவ கல்விக்கான வாய்ப்பைக் கட்டுப்படுத்தும்.

அதனால்தான் நீட் தேர்வு முறையை தமிழகம் தொடர்ந்து எதிர்க்கிறது. மாநில பாடத் திட்டம், அதன் நீண்டகால உள்ளடக்கிய கல்வி மற்றும் சமூக நீதியை ஊக்குவிக்கிறது. அதை ஒரே மாதிரி அணுகுமுறையைக் கொண்ட நீட் தேர்வு முறை குறைத்து மதிப்பிடுவதால், நகர்ப்புற பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கே சாதமாகிறது.

மாநிலங்கள் அவற்றின் சமூக } கலாசார நிலப்பரப்புகளுக்கு ஏற்ப கல்வி முறையை வடிவமைத்துக் கொள்ளும். அதிகாரப் பரவலாக்கம் மாநிலங்களை புதுமையை நோக்கியும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்றவாறு கல்வி முறையை கொண்டிருப்பதையும் உறுதி செய்யும். எனவே, மாநில பட்டியலில் கல்வியை மீண்டும் கொண்டு வந்து மாநிலங்களின் சுயாட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com