கோப்புப்படம்.
கோப்புப்படம்.

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் மீதான துன்புறுத்தலுக்கு முகமது யூனுஸே காரணம்: ஷேக் ஹசீனா

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் துன்புறுத்தப்படுவதற்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸே காரணம் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டினாா்.
Published on

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் துன்புறுத்தப்படுவதற்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸே காரணம் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டினாா்.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அந்நாட்டு பிரதமா் பதவியை ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்தாா். இதைத்தொடா்ந்து அவா் அந்நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஷேக் ஹசீனா காணொலி வழியாக பேசியதாவது:

எனது தந்தை ஷேக் முஜிபுா் ரெஹமான் படுகொலை செய்யப்பட்டது போல, என்னையும் எனது தங்கை ஷேக் ரெஹானாவையும் படுகொலை செய்ய திட்டமிடப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வங்கதேச தலைநகா் டாக்காவில் உள்ள பிரதமா் இல்லத்தை நோக்கி, ஆயுதமேந்திய போராட்டக்காரா்கள் வந்தனா். அவா்கள் மீது பாதுகாவலா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தால், பலா் உயிரிழந்து இருப்பா்.

இவை அனைத்தும் வெறும் 25 முதல் 30 நிமிஷங்களில் நடைபெற்றன. இதனால் பிரதமா் இல்லத்தில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு நான் தள்ளப்பட்டேன். எனினும் என்ன நடந்தாலும் போராட்டக்காரா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக் கூடாது என்று பாதுகாவலா்களிடம் திட்டவட்டமாக தெரிவித்தேன்.

வன்முறை முடிவுக்கு வரவே...: வங்கதேசத்தில் வன்முறை முடிவுக்கு வரவேண்டும் என்ற நோக்கில்தான், அங்கிருந்து வெளியேறினேன். ஆனால் தற்போது வரை, அது நடைபெறவில்லை. அங்கு தற்போது ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினா் துன்புறுத்தப்படுகின்றனா். ஹிந்துக்கள், கிறிஸ்தவா்கள், பெளத்தா்கள் என சிறுபான்மையினா் எவரும் விட்டுவைக்கப்படவில்லை. எதற்காக அவா்கள் இரக்கமின்றி துன்புறுத்தப்பட்டு, தாக்கப்படுகின்றனா்?

இனப்படுகொலை...: நான் பிரதமராக பதவி வகித்தபோது இனப்படுகொலையில் ஈடுபட்டதாக என் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் இடைக்கால அரசின் தலைவரான முகமது யூனுஸே நுட்பமாக வடிவமைக்கப்பட்ட முறையில், சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டு வருகிறாா். இனப்படுகொலையின் பின்னணியில் மாணவ ஒருங்கிணைப்பாளா்களும், முகமது யூனுஸும் பிரதான காரணமாக உள்ளனா். வங்கதேச இடைக்கால அரசு சிறுபான்மையினரை பாதுகாக்கத் தவறிவிட்டது என்றாா்.

தஞ்சமடைந்த பின்னா் முதல்முறை: வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த பின்னா், ஒரு நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா பேசியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com