
புது தில்லி: குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில விவசாயிகள் ஷம்பு எல்லையில் இருந்து தில்லி நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர்.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஷம்பு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 101 பேர் தில்லி நோக்கி இன்று பிற்பகல் 1 மணிக்கு பேரணியைத் தொடங்கினர்.
ஷம்பு எல்லையிலிருந்து தில்லி நோக்கிப் பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகள், அங்கேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். விவசாயிகளை தடுத்து நிறுத்திய ஹரியாணா காவல்துறையினர், பேரணியை மேற்கொண்டு நடத்தக்கூடாது என்றும், பேரணிக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதையும் காட்டினர்.
அம்பாலா மாவட்ட நிர்வாகம், அப்பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் ஓரிடத்தில் கூடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே, ஹரியாணா அரசு, வெள்ளிக்கிழமை, அம்பாலா மாவட்டத்தில் மொபைல் இன்டெர்நெட், அதிக எஸ்எம்எஸ் அனுப்புவது உள்ளிட்ட சேவைகளை 11 கிராமங்களில் நிறுத்தியிருக்கிறது. இது டிச.9 வரை நீடிக்கும்.
அம்பாலா மாவட்த்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
விவசாயிகளின் பேரணியை ஷம்புவிலிருந்து வரவிடாமல் தடுத்து நிறுத்தும் வகையில் காவல்துறையினர் சாலையில் பல அடுக்குகளைக் கொண்ட தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். விவசாயிகள், காவல்துறையின் தடுப்புகளை தகர்த்தெறிந்துவிட்டு பேரணியை மேலும் கொண்டு செல்ல முயன்றனர். இதனால், விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு அடி கூட எடுத்து வைக்க விட மாட்டோம் என்று ஹரியாணா காவல்துறையினர் விவசாயிகளை எச்சரித்தனர். அவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசி தாக்கினர். ஆனால் விவசாயிகள் காவல்துறையினர் ஏற்படுத்திய தடுப்புகளை எல்லாம் மிக எளிதாக களைந்துவிட்டனர்.
ஷம்புவில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால், கொடிகளுடன் அவர்கள் அங்கேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லியை நோக்கி நூற்றுக்கணக்கான விவசாயிகள் திங்கள்கிழமை பேரணியாக புறப்பட்டனா். பாரதிய கிசான் யூனியன், பாரதிய கிசான் பரிஷத், சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா அமைப்புகள் சாா்பாக இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.