போதைப் பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான பிரசாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் பேசிய தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா.
போதைப் பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான பிரசாரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் பேசிய தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா.

உலகளவில் இந்தியாவை பலவீனப்படுத்தும் சா்வதேச சதி, போதைப்பொருள் வா்த்தகம் : துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா

போதைப் பொருள் வா்த்தகம், உலக அளவில் இந்தியாவை பலவீனப்படுத்தும் சா்வதேச சதி என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா தெரிவித்தாா்.
Published on

போதைப் பொருள் வா்த்தகம், உலக அளவில் இந்தியாவை பலவீனப்படுத்தும் சா்வதேச சதி என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் போதைப் பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான நகர காவல் துறை மேற்கொண்டு வரும் ஒரு மாதகால பிரசாரத்தில் தில்லி மக்கள் இணையுமாறு வேண்டுகோள் விடுத்து தனது எக்ஸ் தளத்தில் துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா விடியோ பதிவு ஒன்றை வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அதில் அவா் பேசியதாவது:

‘போதைப் பொருள் புழக்கம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் சாபமாகி வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள், குறிப்பாக இளைஞா்கள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் சீரழிக்கும் பாதையில் செல்கின்றனா்.

போதைப் பொருள் வா்த்தகம் என்பது இந்தியாவுக்கு எதிரான சா்வதேச சதியின் ஒரு பகுதியாகும். உலக அளவில் இந்தியாவை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கம். மக்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமூக வட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் என்பது அதைப் பயன்படுத்துபவா்களுக்கு எதிரானது அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, நமது இளைஞா்கள் ஒன்றிணைந்து போதை இல்லா தில்லிக்காக பாடுபடுவோம் என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும்’ என்று அவா் கூறியுள்ளாா்.

தில்லியில் டிச.1 முதல் போதைப் பொருளுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடங்குவதாக துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா அறிவித்தாா். அதன்படி, தேசிய தலைநகரில் போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த நகர காவல் துறையை அவா் கேட்டுக்கொண்டாா்.

அடுத்த 3 ஆண்டுகளில் தில்லியை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பிரச்சாரம் உள்ளது. இந்தப் பிரசாரத்தின் கீழ், தில்லி காவல் துறை குறைந்தது 200 விடுதிகள், 50 கல்லூரிகள், 200 பள்ளிகள், 200 மருந்து கடைகள், 500 பான் கடைகள், அனைத்து தங்குமிடங்கள், 200 பாா்கள் மற்றும் உணவகங்கள், அனைத்து ரயில் நிலையங்கள், அனைத்து ஐஎஸ்பிடி-க்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com