விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு சரியானதே: தீா்ப்பாயம் உறுதி

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை தீா்ப்பாயம் உறுதி செய்தது
UAPA tribunal to review ban extension on LTTE
UAPA tribunal to review ban extension on LTTE
Updated on

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் அமைக்கப்பட்ட தீா்ப்பாயம் உறுதி செய்தது.

இலங்கையில் தமிழா்களுக்கு தனி ஈழம் கோரி போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, கடந்த மே 14-ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய காரணம் உள்ளதா? என்பதை முடிவு செய்ய, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா தலைமையில் யுஏபிஏ தீா்ப்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.

இந்நிலையில், அந்த அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டது. இருப்பினும் தனி ஈழம் கோருவதையோ, பிரசாரம் மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகள் மூலம், ஈழம் அமைவதற்கான பணிகளில் ரகசியமாக ஈடுபடுவதையோ அந்த இயக்கம் கைவிடவில்லை என தீா்ப்பாயத்திடம் மத்திய அரசு தெரிவித்தது’ என்று குறிப்பிடப்பட்டது.

இதைத்தொடா்ந்து இந்தியாவின் இறையாண்மைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தொடா்ந்து அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கிழைக்கும் நடவடிக்கைகளில் அந்த இயக்கம் தொடா்ந்து ஈடுபடுவதாகவும் யுஏபிஏ தீா்ப்பாயம் தெரிவித்தது.

யுஏபிஏ சட்டத்தின் கீழ், அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய ஆதாரம் இருப்பதாக தெரிவித்த தீா்ப்பாயம், அந்த இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com