விவசாயிகள் சங்கங்களுடன் மத்திய பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம்!

விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய விவசாயப் பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டம் இன்று நடத்தப்பட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை செயலாளர் மற்றும் நிதித் துறை இணை அமைச்சர்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை செயலாளர் மற்றும் நிதித் துறை இணை அமைச்சர்.
Published on
Updated on
1 min read

விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கிய விவசாயப் பொருளாதார நிபுணர்களுடன் பட்ஜெட் தொடர்பான 2-வது ஆலோசனைக் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வருகிற 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்றது.

விவசாயத் துறையில் முக்கிய சவால்கள் மற்றும் புதிய வாய்ப்புகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கொள்கை மாற்றங்கள், பட்ஜெட் தேவைகள் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் சீர்திருத்தங்கள் போன்ற பரிந்துரைகள் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது.

விவசாய நடைமுறைகள், உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்கள் தொடர்பாக விவசாய பொருளாதார வல்லுநர்கள் அறிவுரைகள் வழங்கினர்.

இது தொடர்பாக நிதித்துறை அமைச்சகத்தின் எக்ஸ் தளப் பதிவில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய விவசாயப் பொருளாதார வல்லுநர்களுடன் புது தில்லியில் நடத்தப்பட்ட 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய 2-வது ஆலோசனைக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதில், நிதித்துறை இணை அமைச்சர், நிதித்துறை செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை, முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.

பல்வேறு துறைகளில் உள்ள பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளைச் சேகரித்து விரிவான மற்றும் பல தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கிய பட்ஜெட்டை உருவாக்க நிதி அமைச்சகம் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறது.

முன்னதாக, வரவிருக்கும் பட்ஜெட்டுக்கான உள்ளீடுகள் மற்றும் ஆலோசனைகளைச் சேகரிப்பதற்காக பொருளாதார வல்லுநர்களுடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

நிதி அமைச்சகம் ஆண்டுதோறும் நிபுணர்கள், தொழில்துறையினர், பொருளாதார நிபுணர்கள் மற்றும் மாநில அதிகாரிகளுடன் பட்ஜெட் ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறது. அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தயாரிக்கும் அதிகாரப்பூர்வ நடவடிக்கை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டும் வருகிற பிப். 1 அன்று நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.