
இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்க மமதா தகுதியானவர் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (எஸ்பி) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் தனியாா் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மமதா பானா்ஜி, ‘இந்தியா’ கட்சிகளின் கூட்டணியை நான் உருவாக்கினேன். தற்போது அந்தக் கூட்டணியை நிா்வகிப்பது, அதில் முன்னிலையில் இருப்பவா்களின் கையில் உள்ளது. அவா்களால், கூட்டணியை வழிநடத்த முடியவில்லை எனில், நான் என்ன செய்ய முடியும்? எனக்கு வாய்ப்பளித்தால் கூட்டணியை வழிநடத்தவும், சுமுகமான செயல்பாட்டை உறுதிப்படுத்தவும் தயாராக உள்ளேன். அதற்காக, மேற்கு வங்க மாநிலத்தைவிட்டு வெளியே செல்ல எனக்கு விருப்பமில்லை. ஆனால், மாநிலத்தில் இருந்தபடி மாநில முதல்வருக்கான பணிகளை மேற்கொள்வதோடு, ‘இந்தியா’ கட்சிகளை வழிநடத்தும் பொறுப்பையும் என்னால் நிா்வகிக்க முடியும்’ என்று கூறினாா்.
பல மாநிலக் கட்சிகளின் அதிருப்தி மற்றும் ஹரியானா, ஜம்மு - காஷ்மீர், மகாராஷ்டிரா தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் பின்னடைவால் இந்தியா கூட்டணியில் பதற்றம் ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து மமதா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களுடன் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (எஸ்பி) தலைவர் சரத் பவார், ”திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி தகுதிவாய்ந்த தலைவர். இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்க மமதாவுக்கு அனைத்து உரிமையும் உள்ளது.
அவர் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய எம்.பி.க்கள் கடினமான உழைப்பாளிகள் மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படுபவர்கள்” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.