
ஒடிசாவில் கடந்த 6 ஆண்டுகளில் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆன்லைன் வர்த்தக மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மோகன் சரண் மாஜி திங்கள்கிழமை சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மோகன் ஆன்லைன் மோசடி குறித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
2019 முதல் நவம்பர் 2024 வரை மாநிலத்தில் 769 ஆன்லைன் வர்த்தக மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 59,437 பேர் ஆன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
பெரும்பாலான ஆன்லைன் வர்த்தக மோசடி வழக்குகள் 2023 மற்றும் 2024-ல் பதிவாகியுள்ளன.
கடந்த 2023ல் 18,994 பேரை ஏமாற்றியதாக 190 வழக்குகளும், நடப்பாண்டில் 472 வழக்குகளில் 40,270 பேர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் எம்எல்ஏ தாரா பிரசாத் பாஹினிபதியின் கேள்விக்கு முதல்வர் தெரிவித்தார்.
2023ல் 18,804 பேரை ஏமாற்றியதாகக் கூறப்படும் சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக நான்கு ஆன்லைன் வர்த்தக மோசடி வழக்குகளை ஒடிசா காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்தது.
இதேபோல், நடப்பாண்டில் இதுபோன்று மூன்று வழக்குகள் பதிவு செய்துள்ளது, இதில் ஆன்லைன் வர்த்தகத்தின் போது 40,219 பேர் ஏமாற்றப்பட்டனர்.
ஆன்லைன் வர்த்தக குற்றங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய முதல்வர், புவனேஸ்வரில் செப்டம்பர் 5, 2023 முதல் குற்றப்பிரிவின் கீழ் பிரத்யேக சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வருகிறது என்றார்.
குறிப்பாகப் போலி மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள், ஹேக்கிங், ஏடிஎம் மற்றும் ஆன்லைன் வங்கி மோசடி, கிரெடிட் கார்டு மோசடி, இணையதளத்தை சிதைத்தல், சிறுவர் ஆபாசம் உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்களை விசாரிப்பதில் இந்த பிரிவு நிபுணத்துவம் பெற்றதுள்ளது.
இந்த பிரிவு ஒடிசாவில் அதிகரித்து வரும் இணையக் குற்றங்களின் சிக்கலான தன்மையை அதன் சிறப்புத் துணை பிரிவுகள் மூலம் நிவர்த்தி செய்கிறது, ஒவ்வொன்றும் நிபுணத்துவத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் கவனம் செலுத்துகிறது.
2004 முதல் சைபர் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருவதாகவும், தற்போது 25 லட்சத்துக்கும் அதிகமான மோசடிகள் தொடர்பான வழக்குகளை காவல் நிலையம் கையாளுகிறது. கூடுதலாக 11 புதிய சைபர் கிரைம் காவல் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும், சைபர் ஹெல்ப் டெஸ்க், 1930 கால் சென்டர், குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆன்லைன் துஷ்பிரயோக கண்காணிப்பு பிரிவு, இணைய கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, சைபர் தடயவியல் பிரிவு, சமூக ஊடக செல் மற்றும் சைபர் டிரேசிங் பிரிவு ஆகியவை சைபர் கிரைம் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக மாநிலத்தில் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.