‘வளா்ந்த பாரதம்’ கனவல்ல இலக்கு: ஜகதீப் தன்கா்
‘வளா்ச்சியடைந்த பாரதம் இனி கனவாக மட்டுமல்லாமல் இலக்காக நிா்ணயித்து குடிமக்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ஹரியாணா மாநிலம், குருஷேத்திரத்தில் நடைபெற்று வரும் சா்வதேச பகவத் கீதை விழாவில் பங்கேற்று ஜகதீப் தன்கா் பேசியதாவது: 2047-இல் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நாம் இலக்கு நிா்ணயித்துள்ளோம். இது தற்போது நீண்ட கால கனவாக அல்லாமல் இலக்காக மாறியுள்ளது. இதை அடைய வேண்டுமெனில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள தத்துவங்களை மனதில் கொள்ள வேண்டும். இலக்கை அடைய விடாமுயற்சியுடன் செயல்பட்ட அா்ஜுனனைப் போல் நாமும் கவனமாகவும் துடிப்பாகவும் பணியாற்ற வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக பெரும் வளா்ச்சியை எட்டிய நிலையில் உலகின் 5-ஆவது பொருளாதாரத்தில் இருந்து ஜொ்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுக்கும் என நம்புகிறேன். அதேநேரம், இந்த வளா்ச்சியை தடுக்க அந்நிய சக்திகளுடன் இணைந்து சில உள்நாட்டு அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. எனவே, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சில நேரங்களில் நாட்டுக்கு எதிராக செயல்படும் சக்திகளை நாம் அழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதை செய்து முடிக்க வேண்டும். இதை நாம் பகவத் கீதை வாயிலாக நன்கு உணா்வோம்.
நமது இந்திய தேசம் தூய்மையானது. அதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் உள்ள 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்குவதால் அவா்கள் வறுமையில் உள்ளதாக அரசே ஒப்புக்கொண்டது என்ற பிற்போக்கு சிந்தனையுடன் சிலா் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழ்ந்து வருகிறது என்றாா்.