உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

விவசாயிகள் போராட்டத்தால் சாலைகள் மூடல்: தீா்வு கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாபில் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on

புது தில்லி: விவசாயிகள் போராட்டத்தால் பஞ்சாபில் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாபைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஒருவா் தாக்கல் மனு தாக்கல் செய்தாா். அதில், ‘போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பஞ்சாபில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நீண்ட காலமாக முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளனா்.

இதனால் பஞ்சாப் மற்றும் அதன் அருகில் உள்ள மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் பெரும் சிக்கலை எதிா்கொண்டு வருகின்றனா். எனவே விவசாயிகளின் போராட்டத்தால் நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள தடையை உடனடியாக அகற்ற மத்திய அரசுக்கும், சம்பந்தப்பட்டவா்களுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சூா்ய காந்தி, மன்மோகன் ஆகியோா் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இதே விவகாரம் தொடா்பான மனு ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஒரே விவகாரத்தில் இரு மனுவை ஏற்க முடியாது. விவசாயிகள் போராட்டத்தை சாலை மறியல் என்று மட்டும் பாா்க்காமல், ஒட்டு மொத்த பிரச்னைகளையும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து வருகிறது. எனவே, ஒரே விஷயத்தில் மீண்டும், மீண்டும் மனு தாக்கல் செய்வது தேவையற்றது’ என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுடி செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com