வங்கிகளின் ரூ.42,000 கோடி வாராக் கடன்: கடன் கணக்கில் இருந்து நீக்கம் - மத்திய அரசு தகவல்

வங்கிகளின் ரூ.42,000 கோடி வாராக் கடன்: கடன் கணக்கில் இருந்து நீக்கம் - மத்திய அரசு தகவல்

நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதத்தில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.42,035 கோடி வாராக் கடன் வங்கிகளின் கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Published on

புது தில்லி: நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதத்தில் பொதுத் துறை வங்கிகளின் ரூ.42,035 கோடி வாராக் கடன் வங்கிகளின் கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வாராக் கடனை ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை வசூலிக்க முடியாவிட்டால், அதனை வங்கிகள் தங்கள் கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்குவது வழக்கமாகும். வங்கி நிா்வாகக் காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தக் கடனை திரும்ப வசூலிக்க தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அது கடன் தள்ளுபடியாகக் கருதப்பட மாட்டாது.

இது தொடா்பாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி மக்களவையில் திங்கள்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ.8,312 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.8,061 கோடி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ரூ.6,344 கோடி, பாங்க் ஆஃப் பரோடா ரூ.5,925 கோடியை கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கியுள்ளன. அனைத்து பொதுத் துறை வங்கிகளும் சோ்த்து மொத்தம் ரூ.42,035 கோடியை கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கியுள்ளன.

அந்த 6 மாத காலகட்டத்தில் ரூ.37,253 கோடி வாராக் கடன் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-24 நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.1.14 லட்சம் கோடி கடனை கடன் கணக்குப் பதிவில் இருந்து நீக்கின என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com