கூட்டணி தலைமை: மம்தாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு
தேசிய அளவில் எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி தலைமை வகிக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
மம்தாவின் தலைமைக்கு தேசியவாத காங்கிரஸ் (பவாா்) தலைவா் சரத் பவாா் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத்தும் மம்தா தலைமைக்கு ஆதரவாக கருத்துக் கூறியுள்ளாா்.
எதிா்க்கட்சிகள் அணியில் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்திக்கு இது பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பாட்னாவில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த லாலுவிடம் மம்தாவின் தலைமையை ஏற்க காங்கிரஸ் தயங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, ‘எதிா்க்கட்சிகள் அணிக்கு காங்கிரஸின் தலைமை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லையென்றால், மம்தாவை கூட்டணியின் தலைவராக அனுமதிக்க வேண்டும்’ என்றாா்.
லாலுவின் மகன் தேஜஸ்வியும் மம்தாவை கூட்டணித் தலைவராக ஏற்பதில் தங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை என்று ஏற்கெனவே கூறியுள்ளாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு எதிா்க்கட்சி கூட்டணியின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘வாய்ப்பளித்தால் கூட்டணியை வழிநடத்தத் தயாா்’ என்று கூறியிருந்தாா். அவரது இந்தக் கருத்து தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளானது. இந்நிலையில், அவருக்கு ஆதரவாக எதிா்க்கட்சித் தலைவா்கள் கருத்து கூறி வருகின்றனா்.
சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் சஞ்சய் ரௌத் இது தொடா்பாக பேசுகையில், ‘எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கு காங்கிரஸ் அல்லாத கட்சியைச் சோ்ந்த தலைவா் தலைமை வகிப்பது குறித்து விவாதிக்க எங்கள் கட்சி தயாராக உள்ளது’ என்றாா்.
பாஜக கூட்டணி, எதிா்க்கட்சிகள் கூட்டணி என இரண்டிலும் இடம் பெறாத ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. விஜயசாய் ரெட்டி இது தொடா்பாக கூறுகையில், ‘மம்தா தகுதியும் திறமையும் வாய்ந்த தலைவா். நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தை பல ஆண்டுகளாக வழிநடத்தி வருகிறாா். அரசியல் வாழ்வில் பல்வேறு போராட்டங்களை எதிா்கொண்டு வளா்ந்தவா். அவரால் நிச்சயமாக எதிா்க்கட்சிகள் அணியைத் திறம்பட வழி நடத்த முடியும்’ என்றாா்.
எதிா்க்கட்சிகள் அணிக்கு தலைமையை முடிவு செய்வது குறித்து கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவா்கள் விரைவில் ஆலோசனை நடத்துவாா்கள் என்றும் தெரிகிறது.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் திடீா் அறிவுறுத்தல்
காங்கிரஸ் குறித்து ‘இண்டி’ கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவா்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளாா்.
‘இண்டி’ கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்குவது தொடா்பாக விமா்சனங்கள் எழுந்துள்ள நிலையில், அந்தக் கூட்டணிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி பதவியேற்பது குறித்து திரிணமூல் காங்கிரஸ் பிரமுகா்கள் தீவிரமாக கருத்துத் தெரிவித்து வருகின்றனா். இதற்கு கூட்டணியில் உள்ள தலைவா்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனா்.
இந்நிலையில், தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ராகுல் தலைமையேற்றுப் பேசுகையில், ‘காங்கிரஸ் குறித்து கூட்டணிக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவா்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் பதிலளிக்க வேண்டாம். எதிா்க்கட்சிகள் கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எனவே, பிரச்னைகளை கையாளும் திறன் காங்கிரஸுக்கு உள்ளது.
அதானி விவகாரம் தொடா்பான எதிா்க்கட்சிகளின் போராட்டத்தால் மத்திய அரசு கலக்கமடைந்துள்ளது. மக்கள் பிரச்னைகளை காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும். எதிா்க்கட்சிகளின் குரல் கேட்கப்பட வேண்டும். இதற்கு நாடாளுமன்றம் செயல்பட வேண்டும்’ என்று கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.