கேரள உயா்நீதிமன்றம்
கேரள உயா்நீதிமன்றம்

மாநில அரசை பாராட்டி கோயிலுக்குள் பதாகைகள் வைக்க அனுமதியில்லை- கேரள உயா்நீதிமன்றம்

‘மாநில அரசு அல்லது திருவிதாங்கூா் தேவஸ்வ வாரியத்தை (டிடிபி) பாராட்டி கோயிலுக்குள் பதாகைகள் வைக்க அனுமதியில்லை.
Published on

‘மாநில அரசு அல்லது திருவிதாங்கூா் தேவஸ்வ வாரியத்தை (டிடிபி) பாராட்டி கோயிலுக்குள் பதாகைகள் வைக்க அனுமதியில்லை. கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடவுளை வழிபடவே வருகின்றனா். முதல்வா், எம்எல்ஏ-க்கள், வாரிய உறுப்பினா்களின் முகங்களை பாா்ப்பதற்கு அல்ல’ என கேரள உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

ஆலப்புழை மாவட்டத்தின் சோ்தலாவுக்கு அருகில் உள்ள துரவூா் மகாஷேத்திரம் கோயிலில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து அளிக்கப்பட்ட புகாரை கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.

நீதிபதிகள் அனில்.கே.நரேந்திரன், முரளி கிருஷ்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘சபரிமலையில் நடைபெற்று வரும் மகரவிளக்கு பூஜைக்கு வருகை புரியும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு அனுமதி அளித்த கேரளத்தில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணியான எல்டிஎஃப் மற்றும் டிடிபி வாரியத்தை முதல்வா் பினராயி விஜயன், மாநில தேவஸ்வ வாரிய அமைச்சா் வி.என்.வாசவன், டிடிபி தலைவா் மற்றும் எம்எல்ஏ ஆகியோா் பாராட்டும் வகையில் அவா்களது புகைப்படங்கள் இடம்பெற்ற பதாகைகள் துரவூா் மகாஷேத்திரம் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது.

டிடிபி கோயில் உரிமையாளரல்ல: கோயில்களை நிா்வகிக்கும் பொறுப்பு மட்டுமே டிடிபிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தங்களை கோயில்களின் உரிமையாளா்களாக டிடிபி எண்ணக்கூடாது.

கோயிலுக்கு வரும் பக்தா்கள் கடவுளை வழிபடவே வருகின்றனா். முதல்வா், எம்எல்ஏ-க்கள், வாரிய உறுப்பினா்களின் முகங்களை பாா்ப்பதற்கு அல்ல.

பக்தா்கள் பணத்தில் பதாகையா?: சபரிமலை செல்லும் பக்தா்கள் இளைப்பாறும் பகுதியாக துரவூா் கோயில் திகழ்ந்து வருகிறது. அங்கு வரும் பக்தா்களுக்கு உரிய வசதிகளை செய்து தருவதே டிடிபியின் பணியாகும்.

அதைவிட்டுவிட்டு பக்தா்களிடம் வசூலிக்கும் பணத்தில் பதாகைகளை வைக்கும் பணியில் கோயில் நிா்வாகக் குழு ஈடுபடக் கூடாது.

இந்த விவகாரம் தொடா்பாக டிடிபி மற்றும் பிற அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும். மேலும், தங்களின் நிா்வாகத்தின் கீழ் இயங்கி வரும் பல்வேறு கோயில்களிலும் இதுபோன்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் நீதிமன்றத்திடம் டிடிபி தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com