பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மகாகவி பாரதியின் முழு படைப்புகளின் தொகுப்புகள்: பிரதமர் இன்று வெளியிடுகிறார்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிடுகிறார்.
Published on

நமது சிறப்பு நிருபர்

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் முழுமையான படைப்புகளின் தொகுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி தில்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் புதன்கிழமை (டிச.11) வெளியிடுகிறார்.

மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் டிச. 11-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரம்: சிறந்த தமிழ்க் கவிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சுப்பிரமணிய பாரதியின் முழுமையான படைப்புகளின் தொகுப்பை புதன்கிழமை (டிச.11) பிற்பகல் 1 மணியளவில் தில்லியில் உள்ள எண். 7 லோக் கல்யாண் மார்க்கில் (பிரதமர் இல்ல முகாம்) பிரதமர் வெளியிடுகிறார்.

சுப்பிரமணிய பாரதியின் எழுத்துக்கள் மக்களிடையே தேசபக்தியை ஊட்டியது. இந்திய கலாசாரம் மற்றும் நாட்டின் ஆன்மிக பாரம்பரியத்தின் சாரத்தை வெகுஜன மக்கள் தொடர்புபடுத்தக்கூடிய மொழியில் மக்களிடம் அவர் எடுத்துச் சென்றார். மகாகவியின் முழுமையான படைப்புகளின் 23 தொகுதிகள் சீனி. விசுவநாதனால் தொகுக்கப்பட்டு அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகளின் பதிப்புகள், விளக்கங்கள், ஆவணங்கள், பின்னணித் தகவல்கள் மற்றும் தத்துவ விளக்கங்கள் போன்றவை அடக்கம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

60 ஆண்டு கால முயற்சி: பாரதி அறிஞர் என்று அழைக்கப்படும் சீனி. விசுவநாதனால் தேசியக் கவி பாரதியின் 23 தொகுதிகள் அடங்கிய முழுப் படைப்புகளும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த தொகுப்புகள் 81 வயதான சீனி. விசுவநாதன்

கடந்த 64 ஆண்டுகளாக திரட்டியவையாகும். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த சீனி. விசுவநாதன் ஏற்கெனவே சில தொகுப்புகளை வெளியிட்டு தமிழக அரசிடம் பாரதியார் விருதையும் பெற்றவர். திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவராக இருந்து பதின்ம வயதில் கவிதை வடிவில் பாரதி எழுதிய கடிதத்தில் தொடங்கி, "ரவீந்திர திக்விஜயம்' (ஆக.25, 1921-இல் பாரதி கடைசியாக எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எழுதியது) கட்டுரை வரை இதில் தொகுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com