
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா(வயது 92) வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானார்.
இவர் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.
கர்நாடகத்தின் முதல்வராக 1999 முதல் 2004 வரை எஸ்.எம். கிருஷ்ணா பதவி வகித்துள்ளார். பின்னர் மத்திய அமைச்சராகவும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய போது, அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் எஸ்.எம். கிருஷ்ணா. காவிரி பிரச்னையில் தமிழக அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்.
இவர் கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராகவும், 1971 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் பலமுறை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் தொழில்நுட்பத் தலைநகராக பெங்களூரு நகரத்தை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர்.
காங்கிரஸின் முக்கிய தலைவராக இருந்த எஸ்.எம். கிருஷ்ணா, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் கடந்தாண்டு எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கி மத்திய அரசு கெளரவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.