
இந்தியா கூட்டணியின் தலைவராகத் தகுதி உடையவர் என கூறிய தலைவர்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது மத்திய பாஜக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி காங்கிரஸ் தலைமையில் 'இந்தியா கூட்டணி' உருவானது.
இந்நிலையில் இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் அண்மையில் கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பதிலளித்த மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி,
'என்னை கௌரவித்த அனைத்துத் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துகிறேன். அவர்கள் நலமாக இருக்கட்டும், அவர்களின் கட்சி நலமாக இருக்கட்டும். இந்தியா நன்றாக இருக்கட்டும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்க மமதா தகுதியானவர்: சரத் பவார்!
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறியதாவது:
'மமதா பானர்ஜி கூட்டணியை வழிநடத்தும் திறன் கொண்டவர். நாட்டின் முக்கிய தலைவர்களின் ஒருவராக உள்ளார். அவர் அதற்கு தகுதி உடையவர்தான். அவர் தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தலைவர்கள் பொறுப்புள்ளவர்கள், மக்கள் நன்கு அறிந்தவர்கள். அந்தவகையில் அவர் தகுதி பெற்றவர்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா கூட்டணி தலைமை தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், ''இந்தியா கூட்டணிக்கு மமதா பானர்ஜி தலைமை பொறுப்பேற்க வேண்டும். இதில் காங்கிரஸ் ஆட்சேபனை அர்த்தமற்றது. மமதா தலைமையேற்றால் 2025-ல் மீண்டும் அரசாங்கத்தை அமைப்போம்'' எனக் கூறினார்.
அதேபோல, காங்கிரஸ் தலைமையின்கீழ் இந்தியா கூட்டணி தோல்வி அடைந்துள்ளதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கல்யாண் பானர்ஜி விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.