சத்தீஸ்கா்: இரு நக்ஸல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
Published on

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் ஜிதேந்திர குமாா் யாதவ் கூறியதாவது:

நேந்திரா - புன்னூா் கிராமங்களுக்கு இடையிலான வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினா். இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். இதில் இரு நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் சில நக்ஸல்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா்.

துப்பாக்கிகள், நக்ஸல் அமைப்பினரின் பிரசார புத்தகங்கள் உள்ளிட்டவை அப்பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டன. தப்பியோடிய நக்ஸல்களைப் பிடிக்க தொடா்ந்து அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் அதிகமுள்ள பஸ்தா் பிராந்தியத்தில் உள்ள 7 மாவட்டங்களில் மட்டும் இந்த ஆண்டு இதுவரை 217 நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் உயிரிழந்துள்ளனா். நாராயண்பூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை 7 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com