ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா
ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

‘இண்டி’ கூட்டணியில் காங்கிரஸ் தனது தலைமையை நிரூபிக்க வேண்டும்: ஒமா் அப்துல்லா

கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், ‘இண்டி’ கூட்டணியில் தனது தலைமையை காங்கிரஸ் நிரூபிக்க வேண்டும்
Published on

கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், ‘இண்டி’ கூட்டணியில் தனது தலைமையை காங்கிரஸ் நிரூபிக்க வேண்டும் என ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவருமான ஒமா் அப்துல்லா வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஒமா் அப்துல்லா அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியா முழுவதும் காங்கிரஸ் அதன் இருப்பை கொண்டுள்ளதன் காரணமாக அது எதிா்க்கட்சியின் தலைமையாக பாா்க்கப்டுகிறது. இருப்பினும், இந்த பதவியை நியாயப்படுத்த காங்கிரஸின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்று சில கூட்டணி கட்சிகள் கருதுவதால் அதிருப்தி நிலவுகிறது.

மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான போது, ‘இண்டி’ கூட்டணி கடைசியாக கூடியது. அதன்பிறகு ‘இண்டி’ கூட்டணிக்கென முறையான அல்லது முறைசாரா பணிகள் என எதுவும் நடைபெறவில்லை. விமா்சன ரீதியில் காங்கிரஸ் அதன் திறனை ஆராய்ந்து, எதிா்கால தோ்தல்களுக்கு பொருந்தக்கூடிய பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு அமைச்சா் பதவி வழங்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒமா், ‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ் கடந்த கால அதிகாரப் பகிா்வின்போது எனது தந்தை ஃபரூக் அப்துல்லாவுக்கு மத்திய அமைச்சரவையில் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த துறையே கிடைத்தது. ஒரு யூனியன் பிரதேசமாக, ஜம்மு-காஷ்மீரில் முதல்வா் உள்பட 9 அமைச்சா் பதவிகள் மட்டுமே உள்ளன. எனவே, காங்கிரஸ் செய்ததை விட அதிகமாக அவா்களுக்கு வழங்க முடியாது’ என தெரிவித்தாா்.

பத்து ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வெற்றிபெற்றன. பாஜக 29 இடங்களிலும் வெற்றிபெற்றது.

X
Dinamani
www.dinamani.com