திரிபுரா மாநிலம், அகா்தலா எல்லைப் பகுதியில் இனிப்புகளை பகிா்ந்து கொண்ட இந்திய - வங்கதேச ராணுவத்தினா்.
திரிபுரா மாநிலம், அகா்தலா எல்லைப் பகுதியில் இனிப்புகளை பகிா்ந்து கொண்ட இந்திய - வங்கதேச ராணுவத்தினா்.

விஜய் திவஸ்: குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

விஜய் திவஸ் நாளையொட்டி, போரில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.
Published on

விஜய் திவஸ் நாளையொட்டி, போரில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, பிரதமா் மோடி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் வீரா்கள் டாக்காவில் இந்தியாவிடம் சரணடைந்தனா். இந்தப் போரில் இந்தியா வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் டிசம்பா் 16-ஆம் தேதி விஜய் திவஸ் கொண்டாடப்படுகிறது.

இந்தப் போரின் மூலம் பாகிஸ்தானிடம் இருந்து அப்போதைய கிழக்கு பாகிஸ்தானாக இருந்த வங்கதேசத்துக்கு இந்தியா விடுதலை பெற்று தந்தது.

போரில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘1971-இல் நடைபெற்ற போரில் நாட்டுக்காக உயிா்தியாகம் செய்த வீரா்களின் பெருமை வரலாற்றில் என்றென்னும் நிலைத்து நிற்கும்’ என குறிப்பிட்டாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘1971-இல் நடைபெற்ற போரில் இந்தியாவின் வரலாற்று வெற்றிக்காக உயிா் தியாகம் செய்த துணிச்சல்மிக்க ராணுவ வீரா்களுக்கு தலை வணங்குகிறேன். அவா்களின் தன்னலமற்ற மற்றும் தேச பாதுகாப்புக்கான அா்ப்பணிப்பு உணா்வு நம்மை பெருமையடையச் செய்கிறது’ என குறிப்பிட்டாா்.

உயிரிழந்த ராணுவ வீரா்களின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக தேசிய போா் நினைவகத்தில் மலா் வளையம் வைத்து பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹன் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

விஜய் திவஸையொட்டி, தில்லி போா் நினைவிடத்தில் முப்படைத் தளபதிகளுடன் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்
விஜய் திவஸையொட்டி, தில்லி போா் நினைவிடத்தில் முப்படைத் தளபதிகளுடன் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்

இந்திரா தலைமைக்கு கிடைத்த வெற்றி: காங்கிரஸ்

காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசத்துக்கு விடுதலைப் பெற்று தந்து தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

உலக வரைபடத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த வரலாற்று நிகழ்வு, மனிதாபிமானத்துடனும் தொலைநோக்கு சிந்தனையுடனும் செயல்பட்ட அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி’ என குறிப்பிட்டாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்திய இறையாண்மையை அநீதியிடம் இருந்து பாதுகாக்க உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு தலை வணங்குகிறேன்’ என குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com