
ராமரின் பாரம்பரியங்களால்தான் இந்தியா இயங்கும், பாபரால் அல்ல என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சம்பல் வன்முறை தொடர்பாக உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது, முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் வழியாக இந்து ஊர்வலங்களைச் செல்ல அனுமதிப்பதுதான் சம்பல், பஹ்ரைச் பகுதிகளில் வன்முறையைத் தூண்டியது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு!
இந்த விவாதத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,
'ஒரு முஸ்லீம் ஊர்வலம், இந்துக்கள் வசிக்கும் பகுதி வழியாகவும், ஒரு கோவிலுக்கு முன்பாகவும் செல்ல முடியும் என்றால், முஸ்லீம்கள் இருக்கும் பகுதி வழியாக ஏன் இந்துக்களின் ஊர்வலம் செல்லக்கூடாது?
ஜெய்ஸ்ரீ ராம் என்பது வகுப்புவாத முழக்கம் அல்ல, அது நம்பிக்கையின் சின்னம்.
ராமர், கிருஷ்ணர் மற்றும் புத்தரின் பாரம்பரியங்களால் இந்தியா இயங்குமேதவிர, பாபர், ஔரங்கசீப்பின் பாரம்பரியங்களால் அல்ல.
மக்கள் அடிக்கடி ஒருவரையொருவர் 'ராம் ராம்' என்று வாழ்த்துகிறார்கள். இறுதி ஊர்வலத்தின்போதுகூட, ராமர் நாமம் உச்சரிக்கப்படுகிறது. ராமரின் பெயரைச் சொல்லாமல் இங்கு எதுவும் நடக்காது. அவ்வாறிருக்க, ஜெய்ஸ்ரீ ராம் என்பது எப்படி வகுப்புவாத முழக்கமாகும்?
இதையும் படிக்க | நாடாளுமன்றத்தில் முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு!
பஹ்ரைச் பகுதியில் பாரம்பரிய ஊர்வலத்தை முன்னெடுத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனாலும், ஆத்திரமூட்டும் கோஷங்கள் எழுப்பப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 'ஜெய் ஸ்ரீராம்' என்ற முழக்கம் ஆத்திரமூட்டும் முழக்கம் அல்ல. இது நமது நம்பிக்கையின் முழக்கம், நமது நம்பிக்கையின் சின்னம். நாளையே நான், 'அல்லாஹு அக்பர்' என்ற கோஷம் எனக்குப் பிடிக்காது என்று சொன்னால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா?' என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், 'சம்பல் விவகாரத்தில் நிர்வாகமும் காவல்துறையும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றுகின்றன. மசூதியின் தளத்தை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்குப் பிறகே அங்கு பிரச்சனை தொடங்கியது. அதன்பிறகு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். நீதித்துறை ஆணையம் மூலமாக விசாரித்து இதுபற்றிய அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.