அம்பேத்கர் பற்றி அமித் ஷா பேசியது என்ன?

அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது பற்றி...
அமித் ஷா
அமித் ஷா PTI
Published on
Updated on
2 min read

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் நிா்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, மாநிலங்களவையில் நடைபெற்ற 2 நாள் விவாதத்தின் நிறைவாக செவ்வாய்க்கிழமை சுமார் ஒன்றரை மணிநேரம் அமித் ஷா உரையாற்றினார்.

இந்த உரையின்போது பொது சிவில் சட்டம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எதிர்க்கட்சிகளின் கருத்துகளை விமர்சித்துப் பேசினார்.

அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து பேசிய அமித் ஷா, கடந்த 16 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 22 முறை அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துள்ள நிலையில், காங்கிரஸின் 55 ஆண்டுகால ஆட்சியில் 77 முறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

சர்ச்சை கருத்து

இதனிடையே, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அம்பேத்கர் பெயரையும் அரசியல் சாசனம் குறித்து தொடர்ச்சியாக பேசி வருவதையும் விமர்சித்த அமித் ஷா, “அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்.

அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” என்று விமர்சித்தார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

அமித் ஷாவின் இந்த விமர்சனம் பூதாகரமாகியுள்ளது. அம்பேத்கரை அவமதித்ததற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா, உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்னையாகத்தான் தெரிவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சாவர்க்கர் புகழ்

கடந்த வாரம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாவர்க்கர் குறித்து பேசியதற்கு பதிலளிக்கும் விதமாகா மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அமித் ஷா பேசியதாவது:

“எந்த அரசியல் கட்சியும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் சாவர்க்கருக்கு ‘வீர்’ என்ற பட்டத்தை வழங்கவில்லை. அவரது துணிச்சலுக்காக நாட்டின் 140 கோடி மக்களால் அவருக்கு வழங்கப்பட்டது.

நாட்டின் விடுதலைக்காக கடலில் குதிக்கும் துணிச்சல் யாருக்காவது இருந்தது என்றால் அது வீர் சாவர்க்கர்தான். ஒரே சிறையில், 10 ஆண்டுகள் ஒருவரை ஒருவர் காணாமல் இரண்டு சகோதரர்கள் தண்டனை அனுபவித்தனர். ஒட்டுமொத்த தேசத்திலும் இதுபோன்ற துணிச்சலான குடும்பம் வேறு இல்லை.

1966-ல் சாவர்க்கர் ஒரு சிறந்த மனிதர் என்று இந்திரா காந்தி கூறினார். அவரது பெயர் தைரியம் மற்றும் தேசபக்திக்கு ஒத்ததாக மாறியது. எண்ணற்ற மக்களை ஊக்கப்படுத்திய ஒரு சிறந்த புரட்சியாளர்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com