
நாட்டின் சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக தென்னிந்திய மாநிலங்களில் சிசேரியன் அறுவைசிகிச்சை அதிகமாக நடப்பதாகவும் முதலிடத்தில் தெலங்கானா இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்த நாட்டில் நடக்கும் குழந்தைப் பேறுகளில் சராசரியாக 21.5 சதவீதம் சிசேரியன் மூலம் நடக்கிறதாம். ஆனால் இதனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக தெலங்கானாவில் சிசேரியன் நடக்கிறது.
இது மட்டுமா, 2030ஆம் ஆண்டில், உலகிலேயே, அதிக சிசேரியன் அறுவைசிகிச்சை நடக்கும் நாடாகவும் இந்தியா மாறிவிடும் என்றும் இந்த தரவுகள் எச்சரிக்கின்றன.
இயற்கை முறையில் குழந்தைப் பேறுக்கு பெண்கள் பயப்படுவதும், சில குறிப்பிட்ட நாள், நேரம், ராசியில் குழந்தையைப் பெற்றெடுக்க குடும்பத்தினர் விரும்புவது உள்ளிட்ட சில பல காரணங்கள் சிசேரியன் மூலம் குழந்தைப் பேறு அதிகரிப்பதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏழைகளை விடவும், பணக்காரர்களே அதிகம் சிசேரியன் செய்துகொள்வதாகவும் தெலங்கானா 60.7 சதவீதம் சிசேரியன் மூலம் குழந்தைப்பேறு நடப்பதாகவும் அதுதான் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகம் 44.9 சதவீதத்துடன் 2ஆம் இடத்திலும், ஆந்திரம் 42.4 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும், கேரளம் 38.9 சதவீதத்துடன் 4வது இடத்திலும் கர்நாடகத்தில் 31.5 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
கிழக்கு மாநிலங்கள் சிசேரியன் அறுவைசிகிச்சையில் மிகவும் பின்னால் உள்ளது. கடைசி இடத்தில் நாகாலாந்து உள்ளது. இந்த மாநிலத்தில் ஒட்டுமொத்த குழந்தைப்பேறில், 5.2 சதவீதம்தான் சிசேரியன் நடக்கிறதாம். மேகாலயத்தில் 8.2 சதவீதமும், பிகாரில் 9.7 சதவீதமும் சிசேரியன் அறுவைசிகிச்சைகள் நடக்கிறதாம்.
இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால், இன்னமும் மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் சிசேரியன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி மக்களிடையே அதிகம் பிரபலமடையவே இல்லையாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.