
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில், நோயாளி ஒருவர் குணமாக, தாந்திரீக பூஜைகள் நடத்தப்பட்ட விடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குஜராத்தில், தன்னைத் தானே மந்திரவாதி என கூறிக்கொள்ளும் புவா, ஏழை எளிய மக்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பவர். இவரது செல்வாக்கு எந்த அளவுக்கு சென்றிருக்கிறது என்றால், மருத்துவமனையில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை எல்லாம் மீறி, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கே நேரடியாகச் சென்று அங்குள்ள நோயாளிகள் விரைவாக குணமடைய பூஜைகள் செய்து வருவதாக வெளியாகும் தகவல்களும் விடியோக்களும் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைச் செய்கிறது.
புதன்கிழமை சமூக வலைதளங்களில் இது தொடர்பான விடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அதில், தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் வரும் புவா, தாந்த்ரீக பூஜைகள் செய்வதும், நோயாளியின் உறவினர்கள், புவாவை புகழ்ந்து பேசுவதும் என விடியோ செல்கிறது.
நவம்பர் மாதம் இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே மருத்துவமனைக்குள் இருக்கும் பாதுகாப்பு அரண்களை எல்லாம் கேள்விக்குறியாக்குவதோடு, ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவுக்குள் வெளியாள்கள் நுழையக் கூடாது என்ற விதிமுறையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அது மட்டுமல்ல, மருத்துவமனைக்குள் புகைப்படங்கள் விடியோக்கள் எடுக்கக் கூடாது என்ற விதி இருக்கும் நிலையில் மருத்துவமனை மற்றும் ஐசியுவிக்கு வெளியே சில ரீல்களையும் புவா பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு நோயாளி அருகில் புவா நின்றுகொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. இது குறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
உறவினர் போல மருத்துவமனைக்குள் நுழைந்து இந்த தாந்திரீக பூஜைகள் செய்ததாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.
இந்த விடியோ வெளியானதைத் தொடர்ந்து, புவா பல்வேறு மருத்துவமனைகளுக்கும் சென்று நோயாளிகள் குணமடைய பூஜைகள் செய்த விடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.