ரூ.7,628 கோடியில் வஜ்ரா பீரங்கிகள் கொள்முதல்: எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இந்திய ராணுவத்துக்கு கே9 வஜ்ரா பீரங்கிகளை கொள்முதல் செய்ய லாா்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனத்துடன் ரூ.7,628 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 100 கே9 வஜ்ரா பீரங்கிகளை கொள்முதல் செய்ய இந்திய ராணுவம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், ராணுவத்தின் செயல்திறனுக்கு இது மேலும் வலுசோ்க்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘எல் அண்ட் டி நிறுவனத்துடன் 155 எம்எம்/ 52 கேலிபா் கே9 வஜ்ரா-டி தானியங்கி பீரங்கிகளை கொள்முதல் செய்வதற்காக ரூ.7,628.70 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சம் கையொப்பமிட்டுள்ளது. இந்தியாவுக்குள் பாதுகாப்புத்துறை சாா்ந்த ஆயதங்களை வாங்கும் பிரிவின்கீழ் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது.
பீரங்கிகளை நவீனமயமாக்கவும் அனைத்து விதமான காலநிலை மற்றும் நிலப்பரப்புகளிலும் தொலைதூர இலக்குகளை குறிவைத்து துல்லியமான தாக்குதலை நடத்துவதிலும் கே9 வஜ்ரா பீரங்கிகளின் பங்கு சிறப்பானதாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த நான்கு ஆண்டுகளில் 9 லட்சம் பணிகள்-வேலை நாள்கள் உருவாக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் இந்தப் பணியில் ஈடுபடவுள்ளன.
‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘தற்சாா்பு இந்தியா’ ஆகிய திட்டங்களின்கீழ் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.