
பஞ்சாப் மாநில எல்லையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் பிடிவாதப் போக்கை விடுத்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்யுக்த கிஸான் மோர்ச்சா (அரசியல்சாரா அமைப்பு), கிஸான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய அமைப்புகளின் தலைமையில் பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் ஷம்பு மற்றும் கனெüரி பகுதியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தில்லிக்கு பேரணியாகச் சென்ற விவசாயிகளை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதை அடுத்து நிகழாண்டு பிப். 13-ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய சங்கத் தலைவர் பஞ்சாப், ஜகஜித் சிங் தல்லேவால் என்பவர் நவ. 26-ஆம் தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு தனது பிடிவாதப் போக்கை விடுத்து விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான போரை நிறுத்த பிரதமர் மோடியால் முடியுமென்றால் தில்லியில் இருந்து வெறும் 200 கி.மீ. தொலைவில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அவரால் முடியாதா? என்ன நேரத்துக்காகக் காத்திருக்கிறார்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பளிக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு செயல்படுகிறது. உலகளாவிய தலைவராக தன்னை அறிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போரை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்.
ஆனால், நாட்டின் உணவு உற்பத்தியாளர்கள் மீது அக்கறையின்றி செயல்படுகிறார்.
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு அப்பட்டமாகப் புறக்கணிக்கிறது; இது மிகவும் வருத்தத்துக்குரியது. உணவு உற்பத்தியில் இந்த தேசம் மிக நெருக்கடியை சந்தித்தபோது கடின உழைப்பும், உறுதியும் கொண்ட இந்த மாநில விவசாயிகள்தான் தேசத்தை உணவு உற்பத்தில் தன்னிறைவு பெற செய்தனர்.
தலைநகர் தில்லியிலிருந்து 200 கி.மீ. தொலைவில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வராதது வியப்பாக உள்ளது.
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்தவொரு சிறப்பு தருணத்திற்காகவும் மத்திய காத்திருக்கக் கூடாது. அவர்களை அரவணைத்து குறைகளைப் போக்கிட வேண்டும். பெருவாரியான மக்களின் நலன் கருதி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.