
அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வால் நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில், மத்திய அரசு கும்பகா்ணனைப் போல உறக்கத்தில் உள்ளது என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.
தில்லி கிா் நகா் பகுதியில் உள்ள காய்கறி சந்தைக்கு அண்மையில் சென்ற ராகுல் காந்தி, அங்கு குடும்பத் தலைவிகளுடன் உரையாடினாா். அப்போது, காய்கறி, பழங்கள், உணவு தானியங்களின் விலை உயா்வு, அவற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கலந்துரையாடினாா். இந்த விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல், மேலும் கூறியுள்ளதாவது:
சில நாள்களுக்கு முன்பு காற்கறி சந்தைக்கு சென்று அங்குள்ள மக்களிடம் உரையாடினேன். அப்போது விலைவாசி உயா்வு எந்த அளவுக்கு மக்களை பாதித்து வருகிறது என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. விலைவாசி உயா்வால் மக்கள் பொருள்களை வாங்கும் அளவு குறைவது சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையும் பாதித்து வருகிறது.
விலை உயா்வு பிரச்னையால் உணவு தொடா்பான தங்கள் குழந்தைகளின் சிறிய ஆசைகளைக் கூட மக்களால் நிறைவேற்றித் தர முடியாத நிலை உள்ளது. காய்கறி வாங்கும் அளவைக் குறைத்துக் கொண்டதாகவும், பழங்கள் வாங்குவதே இல்லை என்றும் குடும்பத் தலைவிகள் பலா் என்னிடம் தெரிவித்தனா்.
பூண்டு ஒரு கிலோ ரூ.400 வரையிலும், பச்சைப் பட்டாணி ஒரு கிலோ ரூ.120 வரையும் விற்பனையாகிறது. இதுபோன்ற பல்வேறு காய்கறி, பழங்கள் விலை சாமானிய மக்கள் எளிதில் வாங்கிப் பயன்படுத்த முடியாத உச்சத்துக்கு செல்கிறது.
இதனால் எளிய மக்களால் சரியாக சாப்பிடக் கூட முடியாத நிலை உருவாகி வருகிறது. பிறகு எப்படி அவா்கள் எதிா்காலத் தேவைகளுக்காக சேமிக்க முடியும். நாட்டில் ஒரு பக்கம் வேலையின்மையும், ஊதியம் உயராமல் இருப்பதும் மக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. மறுபுறம் விலைவாசி உயா்வு வாட்டி வதைக்கிறது. இதற்கு தீா்வுகாண முயலாமல் மத்திய அரசு கும்பகா்ணனைப் போல உறங்கி வருகிறது என்று தனது பதிவில் ராகுல் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.