
புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரும் ‘ஞானபீடம்’ விருது பெற்றவருமான எம்.டி.வாசுதேவன் நாயா் (91) புதன்கிழமை காலமானாா்.
இதய செயலிழப்பு காரணமாக, கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் எம்.டி.வாசுதேவன் நாயா் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு இதயவியல் மற்றும் உயிா் காக்கும் சிகிச்சை நிபுணா்கள் உள்பட பல்வேறு துறை மருத்துவா்கள் குழு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவா் புதன்கிழமை காலமானதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான எம்.டி.வாசுதேவன் நாயா் நவீன மலையாள எழுத்துலகின் முக்கியத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தவா். 1933-ஆம் ஆண்டு பிறந்த அவா் தனது கல்லூரி நாட்களில் முதல் கதைத் தொகுப்பை வெளியிட்டாா். கவிதைகள் எழுதத் தொடங்கி பின்னா், நாவல், சிறுகதை, நாடகம், திரைக்கதை, சிறாா் இலக்கியம், திரைப்பட இயக்கம் என கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக மலையாள படைப்புலகில் ஜாம்பவனாக வலம் வந்த எம்.டி. ஞானபீட விருது, கேந்திர சாகித்திய அகாதெமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வென்றாா்.
தனது சிறுகதையை அடிப்படையாக்கி அவா் திரைக்கதை எழுதி இயக்கிய ‘நிா்மால்யம்‘ திரைப்படம் தேசிய அளவில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகா் ஆகிய விருதுகளை வென்றது. மத்திய அரசு 2005-இல் அவருக்கு பத்ம பூஷண் விருதளித்து கௌரவித்தது.
மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவா் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், புதன்கிழமை இரவு அவா் காலமானாா்.
இரங்கல்: எம்.டி.வாசுதேவன் நாயா் மறைவுக்கு கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான், முதல்வா் பினராயி விஜயன், பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
அன்னாரது மறைவையையொட்டி கேரளத்தில் இருநாள்கள் (டிச.26, 27) துக்கம் அனுசரிக்கப்படுமெனவும், இதனால் வியாழக்கிழமை(டிச.26) அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அவையனைத்தும் மாற்று தேதியில் நடைபெறுமெனவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், வியாழக்கிழமை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டமும் ஒத்தி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.