
உங்களுக்குத் தைரியம் இருந்தால் சங்கம் விஹாருக்கு வருகை தாருங்கள் என மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.
தேசிய தலைநகரில் உள்ள சங்கம் விஹார் பகுதிக்கு மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மாலிவால் வருகை தந்தார். இங்குள்ள மக்கள் நரகம் போன்ற சூழலில் வாழ்ந்து வருவதாகவும், நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் கூட அவ்வாறான நிலை நீடிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
தில்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதி மக்கள் நரகத்தில் வாடும் சூழல்தான் இங்கு நிலவுகிறது. நடுத்தர மக்கள்தான் வேண்டுமென்றே இந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களிலும் இப்படியொரு நிலை இல்லை. சாலைகள் இல்லை, சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் ஆண்டு முழுவதும் சாக்கடை நீர் சாலைகளில் தேங்கி நிற்கின்றது. குடிக்கும் நீரையும் காசு கொடுத்து வாங்கும் சூழல் தான் நிலவுகிறது.
உங்களுக்கு தைரியம் இருந்தால் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கேஜரிவாலும், முதல்வர் அதிஷியும் இந்த பகுதிக்கும் வாருங்கள். மக்கள் உங்கள் தவறான எண்ணங்களை அகற்றுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
தில்லியின் சட்டமன்றத் தொகுதிக்கு வந்திருந்தேன். இதுவரை எந்தப் பகுதியிலும் இவ்வளவு மோசமான நிலையை நான் பார்த்ததில்லை. இந்த பகுதி முழுவதும் ஊழல் நிறைந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள்தான். இந்தப் பகுதியைக் கண்டால் தலைநகர் தில்லியில் உள்ளதென்றால் யாரும் நம்பமாட்டார்கள்.
முன்னதாக ஆம் ஆத்மியை அதன் தில்லி சுகாதார மாதிரி குறித்து மாலிவால் தாக்கி பேசியுள்ளார். மேலும் மருத்துவமனைகளின் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. மக்கள் சரியாக சிகிச்சை மற்றும் மருந்துகள் இல்லாமல் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
தில்லியில் 2025 பிப்ரவரி மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 70 இடங்களில் 62 இடங்களை கைபற்றியது. அதேநேரத்தில் பாஜக 8 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.