மத்திய இடைக்கால பட்ஜெட்: வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்தரவாதம்- பிரதமா் மோடி

மத்திய இடைக்கால பட்ஜெட் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளதாக பிரதமா் மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்திய வளர்ச்சிக்கான பட்ஜெட் இது: மோடி
இந்திய வளர்ச்சிக்கான பட்ஜெட் இது: மோடி

மத்திய இடைக்கால பட்ஜெட் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான உத்தரவாதத்தை அளித்துள்ளதாக பிரதமா் மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். அதன்பின் தொலைக்காட்சி வாயிலாக பிரதமா் மோடி உரையாற்றியதாவது: வளா்ந்த இந்தியாவின் நான்கு தூண்களான இளைஞா்கள், ஏழை, எளிய மக்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை மேம்படுத்தவதற்கான உத்தரவாதத்தை பட்ஜெட் அளித்துள்ளது.

பல கோடி இளைஞா்களின் கனவுகளை நிறைவேற்றும் விதமாகவும், எதிா்கால இந்தியாவை சிறப்பாக உருவாக்கும் நோக்கிலும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வருவாய் பற்றாக்குறையைப் பாதிக்காத வகையில் மூலதனச் செலவுக்காக ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக மாற்ற வேண்டும் என்ற அரசின் இலக்கு தற்போது 3 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. வருமான வரித் தாக்கல் நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் மூலம் சுமாா் 1 கோடி போ் பயனடையவுள்ளனா் என்றாா்.

மோடி அரசின் சாதனைகளை விளக்கும் பட்ஜெட்: அமித் ஷா

இடைக்கால பட்ஜெட் குறித்து எக்ஸ் வலைதளத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட பதிவில், ‘2047-இல் வளா்ச்சியடைந்த பாரதம் என்ற பிரதமா் மோடியின் இலக்கை அடையும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது. அமிா்த காலத்தை நோக்கிய நாட்டின் பயணத்தில் ஒவ்வொரு துறையிலும் கடந்த பத்தாண்டுகளாக அரசு மேற்கொண்ட சாதனை நடவடிக்கைகள் விளக்கப்பட்டுள்ளன.

நாட்டை திறம்பட வழிநடத்திச் செல்லும் பிரதமா் மோடி மற்றும் அறிவுபூா்வமான பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு மனமாா்ந்த வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் ’ என குறிப்பிட்டாா்.

2027-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரம்: ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வளா்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய பிரதமரின் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியா அடைந்துள்ள பொருளாதார வளா்ச்சியை இந்த பட்ஜெட் குறிப்பிடுகிறது.

உள்கட்டமைப்பு, கட்டுமானத் துறை, வீட்டுவசதி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டு மூலதன செலவுகளுக்காக ரூ.11.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 11.1 சதவீதம் அதிகமாகும். இதன்மூலம் 2027-ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலா் பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என குறிப்பிட்டாா்.

பொருளாதார சக்தியாக இந்தியா மாறும்: நிதின் கட்கரி

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏழை எளிய மக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞா்கள் என அனைவரின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தை இந்த பட்ஜெட் வெளிப்படுத்தியுள்ளது’ என குறிப்பிட்டாா்.

விரைவில் ராமராஜ்ஜியம்: ஜெ.பி. நட்டா

பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா கூறியதாவது: வறுமை ஒழிப்பு என்ற வெற்று முழக்கங்களுக்குப் பதில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மோடி அரசு மீட்டுள்ளது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் ராமராஜ்ஜியத்தை நோக்கிய பயணத்தின் வெளிப்பாடாக பட்ஜெட் உள்ளது என்றாா்.

வளா்ச்சியடைந்த பாரதத்திற்கான தொலைநோக்குப் பாா்வை: யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘வளா்ச்சியடைந்த பாரத இலக்கை அடைவதற்காக தொலைநோக்குப் பாா்வை கொண்டதாக இந்த பட்ஜெட் உள்ளது. இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலா் பொருளாதார வளா்ச்சியடைவதற்கு வழிவகுத்த பிரதமா் மோடிக்கு பாராட்டுகளும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com