28-ஆவது காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்: மேக்கேதாட்டு விவகாரத்தை மத்திய நீர் ஆணையத்துக்கு அனுப்ப முடிவு

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய (சி.டபிள்யு.எம்.ஏ.) கூட்டத்தில் மேக்கே தாட்டு அணைக்கான அனுமதி விவகாரத்தில் முடிவெடுக்க கர்நாடகத்தின் வற்புறுத்தலுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய (சி.டபிள்யு.எம்.ஏ.) கூட்டத்தில் மேக்கே தாட்டு அணைக்கான அனுமதி விவகாரத்தில் முடிவெடுக்க கர்நாடகத்தின் வற்புறுத்தலுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தை  மத்திய நீர் ஆணையத்துக்குத் திருப்பி அனுப்ப சி.டபிள்யு.எம்.ஏ.  முடிவெடுத்துள்ளது. மேலும், தமிழகத்துக்கான பிப்ரவரி மாத தண்ணீரை திறந்துவிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  
 28 -ஆவது சி.டபிள்யு.எம்.ஏ. வின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.  ஹல்தார் தலைமையில் வியாழக்கிழமை தில்லியில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆணையத்தின் தமிழக உறுப்பினரும், நீர்வளத்துறைச் செயலருமான சந்தீப் சக்úஸனா மற்றும் காவேரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணியம் ஆகியோரும் மற்ற மாநில 
உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 
இதில் தமிழக உறுப்பினர்கள், தமிழகத்துக்கு மே மாதம் வரை அளிக்கவேண்டிய 19 டிம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என்றும், இதில் ஏற்கெனவே பாக்கியுள்ள 7.61 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகம் வழங்கவும் சி.டபிள்யு.எம்.ஏ. முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், நிகழ் பிப்ரவரி மாதம் தரப்படவேண்டிய 2.5 டிஎம்சி தண்ணீரை தவறாமல் பிலிகுண்டுலுவில் திறந்துவிடவும் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.  
இதற்கு ஆணையத்தின் கர்நாடகம் உறுப்பினரும் அம்மாநில நீர்வளத் துறை செயலருமான ராகேஷ் சிங்  மறுப்புத் தெரிவித்துப் பேசினார். 
ஆனால், சி.டபிள்யு.எம்.ஏ. வின் தலைவர் எஸ்.கே.ஹல்தார், "கடந்த ஜனவரி 31- ஆம் தேதி நீர்பாசன காலம் (நிகழ் நீர் ஆண்டில் ) முடிவடைந்ததைத் உணர்ந்து தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு (தமிழகம் கோரிய 7.61 டிஎம்சி) கர்நாடகம் அணையிலிருந்து தண்ணீர் திறக்க எந்த வழிகாட்டுதலையும் வழங்க முடியாது' எனத் தெரிவித்தார். இதன்படி தமிழகத்துக்கு நிகழ் பிப்ரவரி மாதம் வரை கிடைக்க வேண்டிய 
தண்ணீர் மட்டும் கிடைக்க உறுதியாகியுள்ளது. 
மேலும், இந்த 28 -ஆவது சி.டபிள்யு.எம்.ஏ.  கூட்டத்தில் கர்நாடகம், மேக்கே தாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கான (டிபிஆர்) அனுமதியில் ஆணையம் தனது கருத்துகளை முடிவெடுக்க வலியுறுத்தியது. இந்தத் திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம்   சி.டபிள்யு.எம்.ஏ.வுக்கு அனுப்பியிருந்தது. 
இந்த விவகாரம் குறித்து பேசிய காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தார், "இந்த விவகாரத்தில் அனைத்து உறுப்பினர்களின் கருத்துகள் கோரப்பட்டு பெரும்பான்மையின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்' என்றார். 
இதன்படி, பெரும்பான்மையான (5 பேர்) உறுப்பினர்கள்,  "மேக்கே தாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கையில் உள்ள தொழில் நுட்பம் குறித்து ஆய்வு செய்ய ஆணையத்தின் அதிகாரத்திற்கு உள்பட்டதல்ல. அதை மத்திய நீர் ஆணையமே (சிடபிள்யுசி) ஆய்வு செய்து முடிவெடுக்க திருப்பி அனுப்பப்பட வேண்டும்' எனக்  கூறினர். இதன்படி காவிரி நதி நீர் மேலாண்மைஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார், இந்த விவகாரத்தை மத்திய நீர் ஆணையத்துக்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்து அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com