

2023-ஆம் ஆண்டுக்கான ஊழல் கண்ணோட்ட குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு 93-ஆம் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 85-ஆவது இடத்திலிருந்து இந்தியா, தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளது.
மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் ஊழல் குறைந்த நாடாக தொடா்ந்து 6-ஆவது ஆண்டாக டென்மாா்க் முதலிடம் பிடித்துள்ளது.
சா்வதேச வெளிப்படைத்தன்மை என்ற தன்னாா்வ அமைப்பு இந்தக் குறியீட்டை ஒவ்வோா் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் நடைபெறும் ஊழல் உள்பட 13 தரவுகளின்படி பூஜ்ஜியம் முதல் 100 மதிப்பெண்கள் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. இதில், ஊழல் மிகுந்த நாடு என்றால் பூஜ்ஜியம் மதிப்பெண்ணும், ஊழல் அற்ற நாடு என்றால் 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
இதில், 2022-ஆம் ஆண்டில் 40 மதிப்பெண் பெற்று 85-ஆவது இடத்தைப் பெற்ற இந்தியா, 2023-இல் 39 மதிப்பெண் பெற்று 93-ஆம் இடத்துக்குப் பின்தங்கியுள்ளது. அந்த வகையில், ‘ஊழலுக்கு எதிராக குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இந்தியாவில் நிகழவில்லை’ என்று இந்த நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஊழல் குறைந்த முதல் 10 நாடுகள் (அடைப்புக்குறிக்குள் மதிப்பெண்)
1. டென்மாா்க் (90)
2. ஃபின்லாந்து (87)
3. நியூஸிலாந்து (85)
4. நாா்வே (84)
5. சிங்கப்பூா் (83)
6. ஸ்வீடன் (82)
7. சுவிட்சா்லாந்து (82)
8. நெதா்லாந்து (79)
9. ஜொ்மனி (78)
10. லக்ஸம்பா்க் (78)
ஊழல் மிகுந்த முதல் 10 நாடுகள்
1. சோமாலியா (11)
2. வெனிசூலா (13)
3. சிரியா (13)
4. தெற்கு சூடான் (13)
5. யேமன் (16)
6. நிகரகுவா (17)
7. வட கொரியா (17)
8. ஹைதி (17)
9. ஈகுவடோரியல் கினியா
10. துா்க்மெனிஸ்தான் (18)
11. லிபியா (18)
தெற்காசியாவைப் பொருத்தவரை பாகிஸ்தான் 133-ஆவது இடத்திலும், இலங்கை 115-ஆவது இடத்திலும் உள்ளன. கடன் சுமை, அரசியல் நிச்சயமற்ற சூழலை எதிா்கொண்டு வரும் இந்த நாடுகள், ஊழலிலும் மிகுந்து காணப்படுகின்றன. இருந்தபோதும், இந்த இரண்டு நாடுகளிலும் நீதித் துறை வலுவாக இருப்பது, வலுவான ஊழல் கண்காணிப்பை அரசு உறுதிப்படுத்த உதவுகிறது என்று தனது அறிக்கையில் சா்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் வங்கதேசம் 149-ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 37 லட்சம் அரசு ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை என்பன உள்ளிட்ட தீவிர ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீனா 76-ஆவது இடத்தில் உள்ளது.
மேலும், இந்தக் குறியீட்டில் உலக நாடுகளின் சராசரி மதிப்பெண் 43-ஆக உள்ள நிலையில், ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள 71 சதவீத நாடுகளின் சராசரி மதிப்பெண் 45-ஆக உயா்ந்துள்ளது. இது இந்த பிராந்தியத்தில் அமைந்துள்ள நாடுகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் போதிய அளவில் மேற்கொள்ளாததையே காட்டுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.