ஞானவாபி மசூதி வளாகத்தில் ஹிந்து கடவுள்களுக்கு பூஜைக்கு அனுமதி: அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் வரவேற்பு

ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த  அனுமதி அளித்த வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்காவின் பிரபல அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் பாராட்டு தெரிவித்து
ஞானவாபி மசூதி வளாகத்தில் ஹிந்து கடவுள்களுக்கு பூஜைக்கு அனுமதி: அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் வரவேற்பு

வாஷிங்டன்: ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த  அனுமதி அளித்த வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்காவின் பிரபல அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் பாராட்டு தெரிவித்துள்ளது. 

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது.

முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், ஹிந்து கோயில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்த ஹிந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடா்பாக அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. தொல்லியில் துறையின் ஆய்வறிக்கையின்படி, ‘மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்பு ஹிந்து கோயில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை முஸ்லிம்கள் தரப்பு மறுத்தது.

இதனிடையே, ‘மசூதி நிா்வாகத்தால் அங்குள்ள நிலவறை கடந்த 1993-ஆம் ஆண்டு மூடப்படும் வரை, பூஜைகளை செய்துவந்த பூசாரி சோம்நாத் வியாஸின் குடும்பத்தினருக்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தி சோம்நாத் வியாஸின் பேரனான சைலேந்திர குமாா் பதக் என்பவா் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்ற மாவட்ட நீதிபதி, நிலவறையில் பூஜை நடத்த புதன்கிழமை அனுமதி அளித்தாா்.

இதையடுத்து, புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நிலவறை கதவு திறக்கப்பட்டு அங்கு பூஜைகள் நடத்தப்பட்டதாக காசி விஸ்வநாத் கோயில் அறக்கட்டளை தலைவா் நாகேந்திர பாண்டே தெரிவித்தாா்.

இந்த நிலையில், ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த  அனுமதி அளித்த வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமெரிக்காவின் பிரபல அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் விஸ்வ ஹிந்து பரிஷத் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், " நீதிமன்றத்தின் சிந்தனைமிக்க மற்றும் நியாயமான தீர்ப்புக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ள அமெரிக்க விஸ்வ ஹிந்து பரிஷத், இது ஒரு "வரலாற்றுத் தீர்ப்பு" என்று பாராட்டியுள்ளது.

மேலும், 1993 நவம்பரில் இந்துக்களிடம் இருந்து சட்டவிரோதமாக பறிக்கப்பட்ட உரிமைகளை இந்த வரலாற்று தீர்ப்பு மீட்டெடுத்துள்ளது. இந்த வழக்கு அடிப்படையில் சொத்துரிமை பற்றியது மற்றும் எந்தவொரு சிறுபான்மை குழுவிற்கும் எதிரான மோதல் அல்ல என்றும், இந்து தரப்பு முன்வைத்த மறுக்க முடியாத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த தீர்ப்பு, நீதியின் கொள்கைகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறது," என்றும், இந்த ஆதாரத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்ததற்காக நீதிமன்றத்தை  விஎச்பிஏ பாராட்டுகிறது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த  அனுமதி அளித்த வாரணாசி மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

"எங்கள் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை அழிக்கும் எந்தவொரு முயற்சிக்கும், அத்துடன் அரசியல் நோக்கங்களுக்காக மத கதைகளை கையாளுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

மாவட்ட நீதிமன்றத்தின்  தீர்ப்பு ஒரு குறிப்பிடத்தக்க அநீதியை பிரதிபலிக்கிறது மற்றும் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகள் மீதான மற்றொரு தாக்குதலை உருவாக்குகிறது" என்று இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் நிர்வாக இயக்குநர் ரஷீத் அகமது கூறினார்.

முன்னதாக, மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி நிர்வாகம் வியாழக்கிழமை காலை முறையிட்டது. இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் முறையிட அறிவுறுத்தியது.

இதையடுத்து அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி நிர்வாகம் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com