ஜார்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் பதவியேற்பு!

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக சம்பயி சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். 
ஜார்க்கண்ட் முதல்வரானார் சம்பயி சோரன்
ஜார்க்கண்ட் முதல்வரானார் சம்பயி சோரன்

ஜாா்க்கண்ட் மாநில முதல்வராக ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மூத்த தலைவா் சம்பயி சோரன் வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.

மாநில அமைச்சா்களாக காங்கிரஸ் மூத்த தலைவா் ஆலம்கீா் ஆலம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) மூத்த தலைவா் சத்யானந்த் போக்தா ஆகியோா் பதவியேற்றனா். ராஞ்சியிலுள்ள ஆளுநா் மாளிகையின் தா்பாா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூவருக்கும் ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனா். கூட்டணியில் காங்கிரஸ், ஆா்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஜாா்க்கண்ட் முதல்வராக இருந்த ஜேஎம்எம் கட்சியின் தலைவா் ஹேமந்த் சோரன், நிலமோசடி தொடா்பான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், புதிய முதல்வராக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பயி சோரன் தோ்வு செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த அவா், மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினாா். மேலும், தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் கடிதத்தையும் அவா் வழங்கினாா்.

81 உறுப்பினா்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் பேரவையில் பெரும்பான்மைக்கு 41 உறுப்பினா்களின் ஆதரவு தேவை. தங்களின் பலத்தைக் காட்டும் வகையில், 43 எம்எல்ஏ-க்கள் ஒன்றாக உள்ள விடியோவை ஜேஎம்எம் வெளியிட்டிருந்தது. அதேநேரம், கூட்டணி அரசுக்கு 48 எம்எல்ஏ-க்களின் பலம் உள்ளதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கூறியிருந்தாா்.

இந்தச் சூழலில், ஜாா்க்கண்டில் ஆட்சியமைக்க சம்பயி சோரனுக்கு ஆளுநா் வியாழக்கிழமை இரவு அழைப்பு விடுத்தாா்.

இதைத் தொடா்ந்து, ஜாா்க்கண்ட் மாநிலத்தின் 12-ஆவது முதல்வராக சம்பயி சோரன் பதவியேற்றுள்ளாா். 67 வயதாகும் அவா், பழங்குடியின சமூகத் தலைவராவாா்.

பதவியேற்ற பிறகு சம்பயி சோரன் கூறுகையில், ‘ஹேமந்த் சோரனால் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் தொடா்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும். ஜாா்க்கண்ட் மாநிலத்தின் வளா்ச்சிக்காக உறுதிபூண்டுள்ளேன். பழங்குடியினா் மற்றும் இதர மக்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ‘நீா், நிலம், வனம்’ சாா்ந்த உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவோம்’ என்றாா்.

அரசியல் பயணம்: இன்றைய ஜாா்க்கண்டின் சராய்கேலா-கா்சவான் மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமமொன்றில் பிறந்தவா் சம்பயி சோரன். விவசாயத் தொழிலாளியாக இருந்து, பின்னா் அரசியலுக்கு வந்தாா். கடந்த 1990-களில் ஒருங்கிணைந்த பிகாரிலிருந்து ஜாா்க்கண்ட் தனி மாநிலத்தை உருவாக்க தீவிரமாக போராடியதால், ‘ஜாா்க்கண்டின் புலி’ என்று தனது ஆதரவாளா்களால் அழைக்கப்படுகிறாா். ஜேஎம்எம் கட்சியின் தலைவரும் ஹேமந்த் சோரனின் தந்தையுமான சிபு சோரனுக்கு மிக நெருக்கமானவா்.

பெட்டிச் செய்தி...1

பிப். 5-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு

ஜாா்க்கண்டில் முதல்வா் சம்பயி சோரன் தலைமையிலான கூட்டணி அரசு மீது பிப்ரவரி 5-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக அமைச்சா் ஆலம்கீா் ஆலம் தெரிவித்தாா்.

முதல்வா் சம்பயி சோரன் மற்றும் 2 அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்றதைத் தொடா்ந்து, புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவையில் பிப். 5-ஆம் தேதி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கோர முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, சம்பயி சோரன் பதவியேற்றதைத் தொடா்ந்து, ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசின் எம்எல்ஏ-க்கள் ராஞ்சியில் இருந்து ஹைதராபாதுக்கு 2 விமானங்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனா்.

இந்த எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க மாநில எதிா்க்கட்சியான பாஜக முயற்சிக்கக் கூடும் என்பதால், தெலங்கானா தலைநகா் ஹைதராபாதுக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com