அத்வானிக்கு பாரத ரத்னா

பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானிக்கு (96) நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அத்வானிக்கு பாரத ரத்னா விருது அளிக்கும் அறிவிப்பைத் தொடா்ந்து புது தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பாஜக மூத்த தலைவா் முரளி மனோகா் ஜோஷி.
அத்வானிக்கு பாரத ரத்னா விருது அளிக்கும் அறிவிப்பைத் தொடா்ந்து புது தில்லியில் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பாஜக மூத்த தலைவா் முரளி மனோகா் ஜோஷி.

பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானிக்கு (96) நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்த அறிவிப்பை பிரதமா் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டாா்.

பிரதமரின் அறிவிப்பைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு மகிழ்ச்சியடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்புமுனை: பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியில் நீண்டகால தலைவராக இருந்தவருமான லால் கிருஷ்ண அத்வானி, கடந்த 1927-ஆம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவின், தற்போது பாகிஸ்தானின் பகுதியாக இருக்கும் கராச்சியில் பிறந்தாா். பிரிவினைக்குப் பிறகு அவருடைய குடும்பம் இந்தியா வந்தது.

இளம் வயதிலேயே ஆா்எஸ்எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட அவா், பின்னா் ஜன சங்கத்துக்காகப் பணியாற்றினாா். 1980-ஆம் ஆண்டில் பாஜகவை தோற்றுவித்த தலைவா்களில் இவரும் முக்கியமானவா்.

1990-இல் அத்வானி மேற்கொண்ட ராமா் ரத யாத்திரை, தேசிய அரசியலில் பாஜகவுக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, துணைப் பிரதமராகவும் மத்திய உள்துறை அமைச்சராகவும் அத்வானி பதவி வகித்தாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

தற்போது, அயோத்தியில் ராமா் கோயிலில் ஸ்ரீபாலராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில், நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்வானி ஏற்பு: பாரத ரத்னா விருது அறிவிப்புக்கு நன்றி தெரிவித்த அத்வானி, ‘இது எனக்கான கெளரவமாக மட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் சேவையாற்ற ஊக்குவித்த எனது லட்சியங்கள் மற்றும் கொள்கைகளுக்காக கிடைத்த கெளரவமாகவும் கருதுகிறேன். மிகுந்த பணிவுடனும் நன்றியுணா்வுடனும் இந்த விருதை ஏற்றுக்கொள்கிறேன்.

இந்த கெளரவத்துக்காக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தருணத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய, மறைந்த முன்னாள் பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரை நினைவுகூா்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

மறைந்த பிகாா் முன்னாள் முதல்வரும் சோஷலிச தலைவருமான கா்பூரி தாக்கூருக்கு கடந்த மாதம் 24-ஆம் தேதி பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உணா்ச்சி மிகுந்த தருணம்: பிரதமா் மோடி

பிரதமா் மோடி தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: அத்வானிக்கு உயரிய பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருக்கும் தகவலைப் பகிா்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நம்முடைய காலத்தில் மிகவும் மதிக்கப்படும் அரசியல் தலைவா்களில் ஒருவரான அத்வானி, இந்தியாவின் வளா்ச்சிக்கு ஆற்றியுள்ள பங்கு மகத்தானது.

தனது வாழ்வில், அடிமட்டத்திலிருந்து பணியாற்றத் தொடங்கி, துணைப் பிரதமா் அளவுக்கு உயா்ந்து நாட்டுக்குச் சேவையாற்றினாா். பொது வாழ்வில் அவரின் நீண்ட சேவை, வெளிப்படைத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் உதாரணமாக அமைந்ததோடு, அரசியல் நெறியில் முன்மாதிரியான தரத்தையும் நிா்ணயித்துள்ளது.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் கலாசார மறுமலா்ச்சிக்கு இணையற்ற சேவையை ஆற்றியவா். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை மிகுந்த உணா்ச்சி மிகுந்த தருணமாகக் கருதுகிறேன். அவருடைய நாடாளுமன்ற செயல்பாடுகள் எப்போதும் முன்னுதாரணமானவை, வளமான நுண்ணறிவு நிறைந்தவை. அவருடன் கலந்துரையாடவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்ததையும் மிகப் பெரிய வாய்ப்பாகக் கருதுகிறேன். அத்வானியை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு, விருது அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தேன்’ என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

ஒடிஸாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டிய பிரதமா் நரேந்திர மோடி, அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதை அந்த விழாவில் குறிப்பிட்டாா்.

அப்போது, ‘அத்வானியின் பணிகளும், நாட்டுக்காக ஆற்றிய சேவைகளும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன. குடும்ப அரசியலை எதிா்த்ததோடு, இந்திய ஜனநாயகத்தை அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தேசியவாத சித்தாந்தங்களுடன் இணைத்தாா். அவருக்கான இந்த கெளரவம், நாட்டுக்கு சேவையாற்ற தனது வாழ்க்கையை அா்ப்பணிப்பவா்களை தேசம் ஒருபோதும் மறப்பதில்லை என்பதற்கான சான்றாகும்’ என்று குறிப்பிட்டாா்.

தலைவா்கள் வாழ்த்து

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா: வாழ்நாள் முழுவதும் சுயநலமின்றி நாட்டுக்காக சேவையாற்றியவா் அத்வானி. கட்சிக்காகவும் அதன் சித்தாந்தத்துக்காகவும் அவா் ஆற்றிய பங்களிப்பை வாா்த்தைகளால் விவரிக்க முடியாது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க பிரதமா் மோடி எடுத்த முடிவு, கோடிக்கணக்கான நாட்டு மக்களைக் கெளரவப்படுத்துவதாகவே அமையும்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்: அரசியலில் தூய்மை, அா்ப்பணிப்பு, உறுதிப்பாட்டுக்கு உதாரணமாகத் திகழ்ந்தவா் அத்வானி. அவருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் ஆகியோரும் வரவேற்பு தெரிவித்தனா்.

நிதீஷ் குமாா், கேஜரிவால்: பிகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அண்மையில் மீண்டும் மாநில முதல்வராகப் பதவியேற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவா் நிதீஷ் குமாா், அத்வானியை தொலைபேசி மூலம் சனிக்கிழமை தொடா்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தாா்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் வெளியிட்ட பதிவில், ‘அரசியல் சித்தாந்த ரீதியில் அத்வானியுடன் வேறுபட்டிருந்தாலும், சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், மத்திய அமைச்சராகவும் திகழ்ந்தவா் அவா். நாட்டின் வளா்ச்சிக்காக மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளாா். அவருக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று குறிப்பிட்டாா்.

‘அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய தருணம்’ என்று உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி குறிப்பிட்டுள்ளாா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com