சாகித்ய அகாதெமியின் ஊக்கத்தொகை டாக்சி செலவுக்குக் கூட போதவில்லை -பிரபல கவிஞர் விமர்சனம்

கேரள சாகித்ய அகாதெமி வழங்கிய ஊக்கத்தொகை டாக்சி செலவுக்குக் கூட போதுமானதாக இல்லை என கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காட் விமர்சனம் செய்துள்ளார்.
சாகித்ய அகாதெமியின் ஊக்கத்தொகை டாக்சி செலவுக்குக் கூட போதவில்லை -பிரபல கவிஞர் விமர்சனம்

திருவனந்தபுரம் : கேரள சாகித்ய அகாதெமி வழங்கிய ஊக்கத்தொகை கால் டாக்சி செலவுக்குக் கூட போதுமானதாக இல்லை என்று பிரபல மலையாள கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காட் விமர்சித்துள்ளார்.

தனக்கு வெகுமதி தொகையாக ரூ.2400 மட்டுமே வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இனிமேல் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் தன் வருகையை எதிர்பார்க்க வேண்டாமென கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

கேரளத்தை சேர்ந்த பிரபல கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காட் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். இந்நிலையில், கடந்த மாதம் 30-ஆம் தேதி நடைபெற்ற கேரள சர்வதேச இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சுமார் 2 மணி நேரம் உரையாற்றிய கவிஞர் பாலச்சந்திரனுக்கு கேரள சாகித்ய அகாதெமி சார்பில் ரூ.2400 வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் விழா நடைபெற்ற பகுதியிலிருந்து தனது வீட்டுக்கு கால் டாக்சியில் சென்றடைய கூட அந்த பணம் போதுமானதாக இல்லை என சமூக வலைதளப் பதிவு மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.    

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக ரூ.2400 சன்மானமாக வழங்கப்பட்டது. அதன்பின், எர்ணாகுளத்திலிருந்து திருச்சூர் வரையிலான டாக்சி பயணத்திற்கான செலவு ரூ.3500 ஆனது. ஆகவே மீதமுள்ள தொகையை தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு செலுத்தினேன்.

இனிமேல் கலாசார நிகழ்ச்சி என்ற பெயரில் அழைத்து என்னை தொந்தரவு செய்யாதீர்கள். மிமிக்ரி, பாடல் நிகழ்ச்சி போன்றவற்றிற்காக ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கிலான தொகையை வழங்கத் தயாராக இருக்கிறீர்கள். எனினும், என்னை போன்ற கவிஞருக்கு, அகாதெமி மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகை ரூ.2400 தான்..” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில்,  அவரது இந்த சமூக வலைதளப்பதிவு விவதப் பொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து கேரள சாகித்ய அகாதெமி சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நிர்வாக ரீதியாக நடைபெற்ற குளறுபடியால் இந்த தவறு நிகழ்ந்திருப்பதாகவும், தவறு சரிசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சாகித்ய அகாதெமி தலைவர் கே.சச்சிதானந்த் பேசுகையில், “கவிஞருக்கு உரிய தொகை வழங்கப்படுமெனவும், இதற்காக அவருடைய வங்கிக்கணக்கு  விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com