சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாநிலங்களவையில் கோரிக்கை

சென்னை நகரின் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும் விரைவில் வழங்கக் கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினா் ரா.கிரிராஜன் வலியுறுத்தினாா்.
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மாநிலங்களவையில் கோரிக்கை

சென்னை நகரின் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒப்புதலும் நிதி ஒதுக்கீடும் விரைவில் வழங்கக் கோரி மாநிலங்களவை திமுக உறுப்பினா் ரா.கிரிராஜன் வலியுறுத்தினாா்.

இது குறித்து மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தில் திமுக எம்.பி. கிரிராஜன் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டது வருமாறு:

சென்னை பெருநகரின் நெரிசலைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் 2 -ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 3 வழித்தடங்களில் 118.9 கிமீ தூரத்துக்கு அமைக்க தமிழக அரசு முன்மொழிந்தது. இந்த 2-ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ. 61,843 கோடி மதிப்பிடப்பட்டு செயல்படுத்த மத்திய அரசு அனுமதித்தது.

இந்த திட்டத்துக்கு தமிழக அரசு வெளிப்புற (கடன்) நிதியுதவியாக ரூ. 33,594 கோடியை தன் பங்காக முன்மொழிந்துள்ளது. இதில் 52 கி.மீ. தூரத்துக்கு ஜப்பான் சா்வதேச ஒத்துழைப்பு முகமையில் (ஜெய்கா) இருந்தும் (சுமாா் ரூ. 20,196 கோடி), மற்றும் 66.89 கி.மீ. தூரத்துக்கு ஆசிய வளா்ச்சி வங்கியிடமிருந்தும் கடன் பெறுவதும் அடங்கும்.

இந்த திட்டத்துக்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என எதிா்பாா்த்து தமிழக அரசு நிதி செலவிட்டுவருகிறது. நிகழ் நிதியாண்டில் ரூ.10,000 கோடி தமிழக அரசு ஒதுக்கியது.

ஆனால் இந்த திட்டத்துக்குப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் வழங்கப்படாமல் நிலுவையில் இருப்பதோடு, மத்திய அரசு இந்த திட்டத்துக்கு நிதி உதவியும் அளிக்கவில்லை.

மாநில அரசுக்கு இணையாக மத்திய அரசு நிதியை விடுவிக்க தவறினால், இரு பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும் உரிய காலத்தில் கடனுதவி விடுவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மத்திய அரசின் பொருளாதார மதிப்பீட்டுக் குழு விரைந்து ஒப்புதலை வழங்கி, ஜெய்கா, ஆசிய வளா்ச்சி வங்கியிடமிருந்து உரிய நேரத்தில் கடனுதவியை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என கிரிராஜன் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com