
வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதியின் தோல்வியை சந்தித்தாலும், வயநாட்டில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக வயநாடு தொகுதி காங்கிரஸின் கோட்டையாக திகழ்கிறது. இதே தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘இந்தியா’ கூட்டணியில் மக்களவைத் தேர்தலை சந்திக்க இருக்கும் காங்கிரஸும், இடதுசாரி கட்சிகளும் கேரளத்தில் எதிரெதிரே போட்டியிடவுள்ளனர்.
ஏற்கெனவே, கேரளத்தை பொறுத்தவரை காங்கிரஸும், இடதுசாரிகளும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்க ஆதரவு தேவைப்பட்டால் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றும் இருதரப்பைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களும் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், வயநாடு தொகுதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடும் பட்சத்தில், அவரை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளரை நிறுத்த இடதுசாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
அதன்படி, சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், வயநாடு தொகுதியில் ராகுலுக்கு எதிராக அக்கட்சியின் இந்திய தேசிய பெண்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆனி ராஜாவை வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்ணூரில் பிறந்த ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜாவின் மனைவி.
மேலும், திருவனந்தபுரத்தில் ரவீந்திரன், திருச்சூரில் சுநீல் குமார் மற்றும் மவேலிக்கரையில் அருண் குமார் உள்ளிட்டோரை வேட்பாளராக அறிவிக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.
ராகுலுக்கு எதிராக ஆனி ராஜா நிறுத்தப்பட்டால், வயநாடு தொகுதியில் கடும் போட்டி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.