அயோத்தி ராமர் கோயில் குறித்த முஸ்லிம் லீக் கட்சித் தலைவரின் கருத்து -காங். கூட்டணி ஆதரவு!

அயோத்தி ராமர் கோயில் குறித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநிலத் தலைவர்  பாணக்காடு சயீத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் | படம்:ஏஎன்ஐ
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேரள மாநிலத் தலைவர் பாணக்காடு சயீத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் | படம்:ஏஎன்ஐ

திருவனந்தபுரம் : அயோத்தியில் உள்ள ராமர் கோயிலும் அங்கு கட்டப்பட உள்ள மசூதியும் நாட்டில் மதச்சார்பின்மையை வலுப்படுத்தும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் பாணக்காடு சயீத் சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரளத்தின் மஞ்சேரி பகுதியில், கடந்த மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசிய முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்)  தலைவர் செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்ஙள் கூறியதாவது, “பெரும்பாலான மக்களால் வணங்கப்பட்டு வரும் ராமர் கோயில் இப்போது உண்மையாக மாறியுள்ளது. இதிலிருந்து பின்வாங்க முடியாது. இதற்கெதிராக நாம் போராட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.  

நீதிமன்ற உத்தரவின் பேரில், ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.மேலும், பாபர் மசூதியும் அமையவுள்ளது. இவையிரண்டும் இப்போது இந்தியாவின் ஓர் அங்கமாக மாறியுள்ளன. மேலும், ராமர் கோயிலும் பாபர் மசூதியும் நாட்டின் மதச் சார்பின்மையை வலுப்படுத்தும் இரு சிறந்த உதாரணங்களாக மாற உள்ளன” என்று பேசினார்.

இந்நிலையில், அவர் பேசிய இந்த விடியோ இப்போது சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அவரது பேச்சுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் குரல்கள் கிளம்பியுள்ளன.

கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐயூஎம்எல்), இஸ்லாமிய சமூக  மக்களிடையே பெரும் ஆதரவு பெற்ற கட்சியாக உள்ளது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் பேசிய கருத்து  கேரள அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புக்குரல்கள் கிளம்பின.

கேரளத்தில் அளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய சமூக மக்களின் ஆதரவை பெற்ற ஐஎன்எல் உள்ளிட்ட சில கட்சிகள், அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஷிஹாப் தங்ஙளின் கருத்தை, கேரளத்தை ஆளும் இடதுசாரிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய லீக் கட்சியின் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் என்.கே.அப்துல் அஜீஸ் விமர்சித்துள்ளார். 

அதேவேளையில் ஷிஹாப் தங்ஙள் தெரிவித்த கருத்தை காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் ஆதரித்துள்ளன.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனாநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது. 

கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன்  கூறியதாவது,பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நாடு முழுவதும் கலவரம் மூண்ட நிலையில், கேரளத்தில் கலவர சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. அதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் முகமதுஅலி ஷிஹாப்  தங்ஙள்(ஐயூஎம்எல் தலைவர் தங்கலின் தந்தை).

இப்போது சாதிக் அலில் தங்கலும் சமநிலையான கருத்தை பேசியுள்ளார். அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் அமைதியாக ஒருங்கிணைந்து வாழ வேண்டுமென்பதே எங்களது விருப்பம். ஆகவே தங்கலின் கருத்தை வரவேற்பதாகவும், பாஜகவின் சதி வலையில் மக்கள் சிக்கி விடக்கூடாதென்பதையே தங்ஙள் பேசியிருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com