மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி புகழாரம்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி, மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, வரும் 10ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருக்கிறது.
மன்மோகன் சிங்குக்கு பிரதமர் மோடி புகழாரம்


புது தில்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி, மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, வரும் 10ஆம் தேதியுடன் நிறைவுபெறவிருக்கிறது.

விரைவில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெறவிருப்பதால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், மாநிலங்களவையிலிருந்து ஓய்வுபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரியாவிடை அளித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசும்போது, எம்.பி. பதவி நிறைவடையவிருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து பாராட்டிப் பேசினார். அதாவது, மாநிலங்களவையிலிருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்கள் இந்த நாட்டின் சொத்து. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆறுமுறை இந்த அவையில் உறுப்பினராக இருந்து அலங்கரித்துள்ளார். கரோனா காலத்தில் அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு உறுதுணையாக இருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்ந்தார். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்புகளின்போது, உடல் நலம் குன்றியிருந்தபோது கூட, சக்கர நாற்காலியில் வந்து தனது கடைமையை மன்மோகன் சிங் நிறைவேற்றினார். ஓய்வுபெறவிருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வணக்கம் செலுத்திக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.

டாக்டர் மன்மோகன் சிங், ஒரு தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் அவரது விலைமதிப்பற்ற சிந்தனைகளால், அவையில் அவர் ஆற்றிய பங்களிப்பை இன்று நினைவுகூர விரும்புகிறேன். இவ்வளவு காலமாக, அவர் இந்த அவையையும் நாட்டையும் வழிநடத்திய விதத்துக்காக  மன்மோகன் சிங் என்றென்றும் நினைவுகூரப்படுவார் என்றும் பிரதமர் மோடி மாநிலங்களவையில் தனது உரையின் போது கூறினார்.

மேலும், ஓய்வுபெறும் எம்.பி.க்களின் அனுபவங்கள் இந்த நாட்டுக்கு உதவும். புதிய தலைமுறைக்கு உத்வேகத்தை அளிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com