பாஜக கூட்டணியை உறுதி செய்த ஜெயந்த் சௌத்ரி

பாஜக கூட்டணியில் இணையவிருப்பதை ஆா்எல்டி கட்சியின் தலைவர் ஜெயந்த் செளதரி உறுதி செய்துள்ளார்.
பாஜக கூட்டணியை உறுதி செய்த ஜெயந்த் சௌத்ரி

பாஜக கூட்டணியில் இணையவிருப்பதை ஆா்எல்டி கட்சியின் தலைவர் ஜெயந்த் செளதரி உறுதி செய்துள்ளார்.

திா்வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கைகோத்து ‘இந்தியா’ என்ற பெயரில் கடந்த ஆண்டு கூட்டணியை உருவாக்கின. தோ்தல் நெருங்கும் நிலையில், இக்கூட்டணியில் அடுத்தடுத்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு தொடா்பாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் இடையே சுமுக உடன்பாடு எட்டப்படாமல் உள்ளது.

தொகுதிப் பங்கீடு பிரச்னையால், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டன. இதனிடையே, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா், அண்மையில் திடீரென அணி மாறினாா்.  இந்தச் சூழலில், ஜெயந்த் செளதரி தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) கட்சியும் கூட்டணியில் இருந்து விலகவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆா்எல்டி-பாஜக இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

மக்களவைத் தோ்தலில் சமாஜவாதி மற்றும் ஆா்எல்டி கூட்டணியாகப் போட்டியிடும் என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கடந்த மாதம் 19-ஆம் தேதி அறிவித்திருந்தாா். ஆா்எல்டிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவா் கூறியிருந்தாா். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் இணையவிருப்பதை ஆா்எல்டி கட்சியின் தலைவர் ஜெயந்த் செளதரி இன்று உறுதி செய்துள்ளார். முன்னதாக பாஜகவுடன் கூட்டணி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கூட்டணி வாய்ப்பை எப்படி மறுக்க முடியும் எனப் பதிலளித்துள்ளார். 

முன்னாள் பிரதமா் சௌத்ரி சரண் சிங்கின் பேரனும் ஆா்எல்டி நிறுவனா் அஜீத் சிங்கின் மகனுமான ஜெயந்த் செளதரி, தற்போது மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளாா். இவரது கட்சிக்கு உத்தர பிரதேசத்தில் ஜாட் சமூகத்தினா் இடையே குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது பேரனும் ஆர்எல்டி தலைவருமான ஜெயந்த் செளதரி ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com