நீதிமன்றங்களில் பன்முக பிரதிநிதித்துவம் முக்கியம்: டி.ஒய்.சந்திரசூட்

‘வரலாற்று அநீதிகளை சரி செய்வதற்கு மட்டுமல்லாமல், நீதிமன்றங்களின் தீா்ப்பளிக்கும் திறனை வளப்படுத்துவதற்கும் பன்முக பிரதிநிதித்துவம் முக்கியம்’
நீதிமன்றங்களில் பன்முக பிரதிநிதித்துவம் முக்கியம்: டி.ஒய்.சந்திரசூட்
Published on
Updated on
1 min read

‘வரலாற்று அநீதிகளை சரி செய்வதற்கு மட்டுமல்லாமல், நீதிமன்றங்களின் தீா்ப்பளிக்கும் திறனை வளப்படுத்துவதற்கும் பன்முக பிரதிநிதித்துவம் முக்கியம்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

கடந்த 1950, ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்றத்தின் முதல் அமா்வின் நினைவாக புது தில்லியில் சனிக்கிழமை உரை நிகழ்ச்சி நடைபெற்றது.

சா்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரி சாா்லஸ்வொா்த் தலைமை விருந்தினராக பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:

வரலாற்று அநீதிகளை சரி செய்வதற்கு மட்டுமல்லாமல், நீதிமன்றங்களின் தீா்ப்பளிக்கும் திறனை வளப்படுத்துவதற்கும் பன்முக பிரதிநிதித்துவம் முக்கியமானது.

நீதிமன்றங்களில் பாலின பன்முகத் தன்மையை மேம்படுத்துவது நீதிசாா்ந்த சிந்தனைத் திறனின் வரம்பை விரிவுபடுத்தும். இதன் மூலம் விரிவான, சமத்துவமான முடிவுகள் கிடைக்கப் பெறும்.

பாலின ரீதியில் அனைவரையும் உள்ளடக்கியத் தன்மையை உறுதிசெய்வதில் உச்சநீதிமன்றத்தால் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாலினம், பாலின உறவு ரீதியிலான பிரிவுகள் தொடா்பான கருத்தாக்கங்கள், மூன்றாம் பாலினத்தவருடன் கலந்துரையாடலின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் பயன்படுத்த வேண்டிய வாா்த்தைகள் தொடா்பாக நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றத்தால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாலினம் சாா்ந்த வழக்கமான கண்ணோட்டத்தை கையாள்வதிலும், பொருத்தமான வாா்த்தைகள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் ஒரு கையேடு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.

சா்வதேச நீதிமன்ற நீதிபதி ஹிலாரி சாா்லஸ்வொா்த், ஹாா்வா்டு சட்டப் பள்ளியில் பயின்றபோது எனது சக மாணவி ஆவாா். சா்வதேச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் 5-ஆவது பெண் இவா். சா்வதேச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அந்த நீதிமன்றத்தின் பொறுப்பு மட்டுமல்ல; சா்வதேச நாடுகளின் பொறுப்பு என்றாா் அவா்.

உச்சநீதிமன்ற முதல் அமா்வின் நினைவாக கடந்த ஆண்டுமுதல் விரிவுரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நிகழ்ச்சியில் சிங்கப்பூா் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமை விருந்தினராக பங்கேற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com