தேர்தல் பத்திர முறை ரத்து: உச்சநீதிமன்றம்

தேர்தல் நிதி பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
 உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தேர்தல் நிதி பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-இல் அமல்படுத்தியது. அந்த திட்டத்தின் மூலம், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 1 முதல் ஒரு கோடி வரை பணத்தை செலுத்தி, தேர்தல் நிதி பத்திரத்தைப் பெற்று, அதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். ஒரு நிறுவனம் எத்தனை தேர்தல் பத்திரங்கள் வேண்டுமானாலும் பெறலாம். அந்த பத்திரத்தில் எந்தக் கட்சியின் பெயரும் இடம்பெறாது. அந்த பத்திரத்தைக் கொடுப்பவரின் பெயரும் இடம்பெறாது.

அரசியலில் கருப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த திட்டத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவிலான நிதியை அரசியல் கட்சிகள் பெற்றன. பாஜக அதிகளவிலான நன்கொடையை பெற்றது.

எனினும், இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாக, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்குகளின் விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:

“தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிராக உள்ளது. அரசியல் சாசன பிரிவு 19(1) மீறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மட்டும் கருப்பு பணத்தை ஒழிக்க உதவாது.

தேர்தல் பத்திரங்களை வழங்கும் நடைமுறையை உடனடியாக பாரத ஸ்டேட் வங்கி நிறுத்த வேண்டும். தேர்தல் பத்திரம் பெற்ற அரசியல் கட்சிகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-க்குல் சமர்பிக்க வேண்டும். அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 13-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

15 நாள்களில் பணமாக பெறப்பட்டு மாற்றப்படாத பத்திரங்கள் உடனடியாக உரிய நிறுவனங்களிடமே திருப்பி அளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் பத்திரத்துக்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், ஐ.டி. சட்டத்தில் மேற்கொண்ட திருத்தங்களை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com