பிரதமராக மீண்டும் மோடி வருவது மாநிலக் கட்சிகளை பாதிக்கும்: ப.சிதம்பரம்

இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து என்னால் எதையும் கூற இயலாது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம், கொல்கத்தாவில் பிடிஐ செய்தியாளருக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து என்னால் எதையும் கூற இயலாது. ஏனெனில் அந்தக் கூட்டணியின் பேச்சுவார்த்தைக் குழுவிலோ அக்கூட்டணியின் கூட்டங்களிலோ நான் இடம்பெறவில்லை. ஆனால், பிரதமர் மோடியும் பாஜகவும் மீண்டும் ஆட்சிக்கு வருவது மாநிலக் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைத்துக் கட்சிகளும் புரிந்து கொண்டுள்ளதாக நான் நம்புகிறேன்.

பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய ஜனநாயகத்தை அவர்கள் சீர்குலைத்து விடுவார்கள்; ஜனநாயக அமைப்புகளை அக்கட்சியினர் படிப்படியாக சிதைத்து விடுவார்கள்; ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியை தாங்களாகவே அறிவித்துக் கொள்ளும் ஆளுங்கட்சியைக் கொண்ட பல்வேறு நாடுகளைப் போன்று இந்தியாவும் மாறிவிடும்.

நிலையான, ஆழமாக வேரூன்றிய கட்சிகளைக் கொண்டு இந்தியா கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ஆனால், பல்வேறு கட்சிகளை உடைத்து அதன் மூலம் பாஜக தனது கூட்டணியை உருவாக்கிக் கொள்கிறது. அதன் முக்கிய கூட்டணிக்கட்சிகளாக தேசியவாத காங்கிரஸின் ஒரு பிரிவு, சிவசேனையின் ஒரு பிரிவு ஆகியவை உள்ளன. அதிமுகவின் ஒரு பிரிவும் பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இடம்பெற வாய்ப்புள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தை பாஜக கடத்திச் சென்றுவிட்டது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் நிதீஷ்குமாரை விட்டு விலகலாம். நிலையான அரசியல் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைப்பதில்லை.

பாஜக துப்பாக்கி முனையில் கூட்டணிக் கட்சிகளை வைத்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியோ பரஸ்பரம் மதித்து நடந்து கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கிறது. திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இதுவே இரண்டு அணிகளுக்கும் இடையிலான வேறுபாடாகும்.

பாஜக தனது அரசியல் நலன்களை முன்னெடுக்க மத்திய விசாரணை அமைப்புகளை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது. சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உடைப்பதில் பாஜக எவ்வாறு வெற்றிகரமாகச் செயல்பட்டது என்பதை நாம் கண்டோம்.

வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் காங்கிரஸýடன் கூட்டணி அமைப்பதில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா முடிவெடுத்தது குறித்துக் கேட்கிறீர்கள். அது பற்றி எனக்குத் தெரியாது. திரிணமூல் காங்கிரஸுடனான கூட்டணி முறியவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்தியா கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸும் காங்கிரஸும் இருக்காது என்ற முடிவுக்கு நான் ஏன் வர வேண்டும்?

"ஒரே நாடு } ஒரே தேர்தல்' என்ற கொள்கையானது முற்றிலும் அரசியல் சட்டவிரோதமானதும், கூட்டாட்சிக்கு எதிரானதுமான சிந்தனையாகும். அதை அமல்படுத்த வேண்டுமானால் அரசியல் சாசனத்தில் குறைந்தபட்சம் ஐந்து திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்தத் திருத்தங்களைச் செய்வதற்கான பெரும்பான்மை பலத்தை அவர்களால் (பாஜக) திரட்ட முடியுமா என்பது சந்தேகமே.

எதிர்க்கட்சி இல்லாமல் நாடு ஜனநாயக நாடாக இருக்காது. "ஒரே நாடு - ஒரே தேர்தல்' முறையில் மக்களவைக்கும், 29 மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு மாநில அரசு சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றுவிட்டால் அப்போது என்ன செய்வது? ஒரு மாநில அரசு ஆறு மாதங்களில் கவிழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு அந்த மாநிலத்தில் தேர்தலையே நடத்த மாட்டீர்களா?

என்னைப் பொருத்தவரை தேர்தல் பத்திரங்கள் என்பவை சட்டபூர்வமான லஞ்சமாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com