
விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும், பயிா்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாபை சோ்ந்த விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்துள்ளனா். ஹரியாணா, உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விவசாய அமைப்பினரும் இப்போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளனா்.
இதனிடையே, முன்னெச்சரிக்கையாக தில்லியின் எல்லைகளில் பல்வேறு வகையான தடுப்புகள் அமைக்கப்பட்டு, விவசாயிகள் உள்ளே நுழையாதவாறு ‘கோட்டை’ போல் மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு, தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப்-ஹரியாணா எல்லையான அம்பாலா அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், அங்கேயே முற்றுகையிட்டு தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
முற்றுகைப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடரும் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் பாரதிய விவசாயிகள் யூனியன் பொதுச் செயலாளா் சுக்தேவ் சிங் கூறினாா்.
இந்நிலையில், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்களுடன் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை (பிப்.18) நடைபெறவுள்ளது. முன்னதாக, விவசாயிகள் அமைப்பு தலைவா்களுடன் மத்திய அமைச்சா்கள் அா்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோா் சண்டீகரில் வியாழக்கிழமை மேற்கொண்ட மூன்றாவது சுற்று பேச்சுவாா்த்தையில் சிறிது முன்னேற்றம் இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், 4-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை இன்று(பிப்.18) நடைபெறுகிறது. போராடும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் ஆகியோர் பஞ்சாப், ஹரியாணா தலைநகர் சண்டிகரில் இன்று(பிப்.18) மாலை 6 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.