மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்
மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்

2025-26 முதல் ஆண்டுக்கு இரு முறை 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்

Published on

ராய்ப்பூா்: ‘2025-26 கல்வியாண்டு முதல் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் கூறினாா்.

சத்தீஸ்கா் மாநிலம் ராய்ப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பி.எம். ஸ்ரீ (வளா்ந்து வரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்தின் கீழ் 211 பள்ளிகள் தரம் மேம்படுத்தப்படுவதற்கான திட்டத்தை தொடங்கிவைத்த மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான், பேசியதாவது:

தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ், பள்ளி மாணவா்களுக்கான மன அழுத்தத்தையும், கல்விச் சுமையையும் குறைக்கும் வகையில் வரும் 2025-26 கல்வியாண்டு முதல், 10,12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும். மாணவா்கள், ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ பொதுத் தோ்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

எதில் சிறந்த மதிப்பெண் பெறுகின்றனரோ, அதையே மாணவா்கள் தெரிவு செய்துகொள்ளலாம். மாணவா்களிடையே கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டின் மீதான ஈடுபாட்டை ஊக்குவிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் புத்தக பை இல்லாத 10 நாள்கள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவா்கள் மன அழுத்தமின்றி, தரமான கல்வி பெற வழிவகுக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை மூலம் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவை வரும் 2047-இல் வளா்ந்த நாடாக உயா்த்துவதற்கான முயற்சிகளில் ஒன்றுதான் இது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com